சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்.
பள்ளிவாசலின் இடது புறம் மதரஸா இணைந்திருந்தது.
முதன்மைப் பள்ளிவாசலின் முதல் தளம் கட்டப்பட்டு பணி நிறைவுறும் நிலையில் இருந்தது.
வெள்ளிக்கிழமை மணி நண்பகல் 12.15 மணி.
ஜுஆம்மா தொழுகைக்கு நேரம் இருந்ததால் தொழுகையாளிகள் சிலர் கூடியிருந்தனர்.
ஓட்டி வந்த ஸ்போர்ட்ஸ் சைக்கிளை ஸ்டாண்டிட்டு நிறுத்தினான் அப்பாஸ் அப்ரிதி. முன் சக்கரத்துக்குள் சங்கிலி இட்டுப் பூட்டினான்.
அப்ரிதிக்கு வயது 28. பருமன் ஆன உடல். கலைந்த தலைமுடி. மேல் வரிசைப் பற்கள் முழுவதும் தெற்றி அணில் போல் வாயைக் கூம்பலாய் வைத்திருந்தான்.
பட்டை மீசை. குயுக்தியாய் யோசிக்கும் கண்கள். பேண்ட்டை இடுப்புக்கு மேல் உயர்த்தியிருந்தான். கால் பக்கத்தைச் சுருட்டியிருந்தான். பட்டை பெல்ட். கழுத்து வரை பட்டன் போடப்பட்ட சட்டை. பாத்ரூம் செருப்பு அணிந்திருந்தான். சட்டை பாக்கட்டில் துணித்தொப்பி வீங்கிய வயிறு.
ஒளு செய்யப் போன அப்ரிதி மஸ்ஜித்தின் இரு மோதினார்களில் ஒருவரைப் பார்த்து விட்டான். “அஸ்ஸலாமு அலைக்கும். பீகார்லயிருந்து மோதினார் வேலைக்கு கோயம்புத்தூருக்கு வந்திட்டீங்களாக்கும். நீங்களா வரீங்களா, மத்திய அரசு விரும்பி உங்களை எல்லாம் அனுப்புதா?”
அரைகுறையாகப் புரிந்து கொண்ட மோதினார் நம்பர் ஒன், “நைநை” என மறுத்தார்.
“வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது மோதினார்!”
தர்மசங்கடமாய்ச் சிரித்தார் மோதினார் நம்பர் ஒன்.
“ஒரு மஸ்ஜித்ல ரெண்டு மோதினார் இருக்கீங்களே… ஒரே உறைல இரு கித்தாப்புகள். உங்களுக்குள்ள முட்டல் மோதல் வரல”
“வராது அவர் அஸ்ஸாம். நான் பீகார் ரெண்டு நார்த் சண்டை போட்டுக்குமா?”
“இப்பத்தான் குளிச்சிட்டு ஈரத்துணியோட வரீங்க… எப்ப ரெடியாகி பாங்கு சொல்லுவீங்க?”
“பாங்கு சொன்னா சரியான நேரத்திலப் பாங்கு சொல்லிடுவேன்!”
“பாங்கு சொன்னா சரிதான்!” நோன்புக்கஞ்சி காய்ச்சும் தேக்ஸா பக்கம் போனான் அப்ரிதி.
“இன்னைக்கிக் கறிக்கஞ்சியா, சாதாக்கஞ்சியா?”
கஞ்சி தயாரிப்பவர் “சாதாக் கஞ்சிதான்!”
“நேற்றைக்கி கஞ்சில உப்பு அதிகம்!”
உள்வாசலில் போய் நின்று கொண்டான் அப்ரிதி. அப்ரிதியைக் கடந்து ஒரு தொழுகையாளி உள்ளேப் போனார்.
அப்ரிதி குரலை உயர்த்தி, “எவ்வளவு உரிமையா மஸ்ஜித்துக்குள்ள வரத் தெரியுது? ஆறு மாசமாச் சந்தாவைக் கட்டாம இழுத்தடிக்கிறியே நியாயமா? கஞ்சிக்குப் பணம் குடுத்தியா? டெய்லி ஒரு பெரிய சட்டியைத் தூக்கிட்டுக் கஞ்சி வாங்க வரியே வெக்கமாயில்ல?”
அந்தத் தொழுகையாளி வாய்க்குள் முணுமுணுத்தார். “இந்தக் கிறுக்கன் மானத்தை வாங்குறானே?”
இன்னொரு தொழுகையாளி உள்ளேப் போனார்.
“பள்ளி விரிவாக்கத்துக்கு 40 மூட்டை சிமின்ட் ஹதியா தர்றதா சொல்லி மூணு மாசமாச்சு, சொன்னபடி சிமின்ட்டைத் தரவே இல்லையே ஏன்? வாக்குரைத்தபடி நடந்து கொள்ள மாட்டாயா?”
அந்த தொழுகையாளி பற்களை நறநறவெனக் கடித்தார்.
“நாளைக்குள்ள நாப்பது மூட்டை சிமின்ட்டை பள்ளிக்கு குடுத்து செட்டில் பண்ணனும்!”
ஒரு தொழுகையாளி தொப்பி இல்லாமல் வந்து பள்ளியின் கூடையில் இருக்கும் பிளாஸ்டிக் தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டார்.
“நீ சொந்தமா ஒரு தொப்பி வச்சுக்க மாட்டாயா? நீ தவ்ஹீத்தா, நஜாத்தா, ஜாக்கா, பிஜே குரூப்பா? உளவு பாக்க, சுன்னத் ஜமாஅத் பள்ளிக்கு வரியா?”
அந்தத் தொழுகையாளி பிளாஸ்டிக் தொப்பியாலேயே முகத்தை அடித்துக் கொண்டார்.
திடீரென்று ஒரு குண்டு தொழுகையாளி உள்ளே நுழைந்தார்.
“நீ பள்ளிக்குத் தொழ வரியா, இல்ல குசு போட வரியா? ஹீரோஷிமா, நாகசாகியை விட பயங்கரமா இருக்கு நீ போடுற பாம்!”
“நானென்ன வேணும்னா போடுறேன்… வருது… அடக்க முடியல…”
அமர்ந்திருந்த ஒரு தொழுகையாளி அப்ரிதியை நோக்கிச் சப்தம் போட்டார். “ஏ தாவூத் மகனே, லூஸ் பயலே, வாயைப் பொத்திக்கிட்டு மாடிக்கு தொழப்போ... இல்ல உன்னை முத்தவல்லிகிட்டச் சொல்லி கை கால்களைக் கட்டி கிணத்திலப் போடச் சொல்லிருவேன்!”
“ஆவ்… இசுக்கு புசுக்கு!”
மாடிப்படிக்கட்டுகள் ஏறி எங்கள் வீட்டு பிள்ளை எம்ஜிஆர் போல நின்றான் அப்ரிதி. “எப்பா தொழுகையாளிகளா, தொழுகை முடிஞ்சதும் இரண்டு பக்கெட்களை தூக்கிக்கிட்டு உங்ககிட்ட ஹதியா கேட்டு வராங்க பள்ளி நிர்வாகிகள்... நீங்க என்ன பண்றீங்க? ஒளிச்சு மறைச்சு அஞ்சு ரூபாக் காயினை போடுறீங்க. சிலர் கிழிஞ்ச பத்து ரூபா நோட்டைப் போடுறீங்க… திருத்துங்கப்பா…”
பெரும்பாலான தொழுகையாளிகள் கண்களை மூடித் திறந்தனர்.
“நம்ப மஸ்ஜித்துக்கு ஒருத்தர் தொழ வராரு. அவரு தன்னுடைய காஸ்ட்லியான செருப்பை எல்லாத் தொழுகையாளிகளும் செருப்பைக் கழட்டிப் போடுற இடத்திலக் கழட்டிப் போட மாட்டாரு… அதை தன் ஸ்கூட்டியின் பில்லியனின் அடில பதுக்குவாரு… சக தொழுகையாளிகளின மீது அவ்வளவு நம்பிக்கை!”
“இதெல்லாம் ஒரு குறைன்னு பேசுவியா ஓட்டைவாயா?”
“ஒரு தொழுகையாளி தன்னுடைய இரு மகன்களைக் தொழக் கூட்டிட்டு வருவார். அதுகளுக்கு வயசு நாலும் ஆறும். இரண்டும் தொழும் போது குறுக்கே நெடுக்கே ஓடி ரௌசு பண்ணுங்க!”
“சிறுசுகள் அப்படி இப்படித்தான் இருக்கும். ஒரு இமாம் தொழ வந்த சிறுவர்களுடன் ஓடிப் பிடித்து விளையாடும் விடியோ பாக்கலையா நீ?”
“சில தொழுகையாளிகள் கால்ல வென்னி தண்ணி ஊத்திக்கிட்ட மாதிரி இமாமின் பயான் முடிந்த பிறகுதான் வருவார்கள். தொழுகை முடிந்ததும் துஆ ஓதாமல் குறுக்கேப் புகுந்து ஓடி விடுவார்கள்… எதுக்கு ஓடுறாங்கன்னா... ஒரு கிலோ மாட்டுக்கறி கிரேவி வீட்ல ரெடியா இருக்கும். போய் சுடச்சுட வெட்டத்தான்!”
“அசிங்கப்படுத்துறானே...”
“சில தொழுகையாளிகள் அல்லாஹ்வை வணங்குவார்கள், இறைத்தூதரை மதிக்க மாட்டாங்க… தொழுகையாளிகள் கூட்டத்தோடு சேந்து ஸலவாத் சொல்ல மாட்டாங்க... வாய் பிசின் போட்ட மாதிரி ஒட்டிக்கும்!”
பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் சிரித்தபடி ஓடி வந்தார்.
“அப்ரிதி! ஜுஆம்மா தொழ வர்ற தொழுகையாளிகளை இழிவுபடுத்தாதே…. உனக்குச் சில தொழுகையாளிகளின் நடவடிக்கை பிடிக்கலைன்னா தொழ வராதே….”
“நான் வருவேன்!”
“உன் வாய்க்குள்ள மிளகாப் பொடியைத் திணிக்க வேண்டியதுதான்!”
“மிளகாப்பொடியோட மாங்காய் வடுவையும் திணிச்சா கர்க்முர்க்குன்னு சாப்பிட்டுக்குவேன்!”
“நீ கிறுக்கா அல்லது கிறுக்கு மாதிரி நடிக்ற காரியக்காரனா?”
“மனுசப்பயலுக எல்லோரும் லூஸ்கள்தான்... ஒவ்வொரு விதத்தில...”
“மோதினார் பாங்கு சொல்லப் போரார்… இப்பவாவது அமைதிப்படு அப்ரிதி!”
அமைதியானான்.
மோதினார் பாங்கு சொன்னார்.
இமாம் குறிப்புகளுடன் வந்து பயான் சொல்ல ஆரம்பித்தார். அப்ரிதி அமைதியாக போய் முதல் தளத்தில் அமர்ந்தான்.
“தொழுகை முக்கியம்தான்… ஆனா தொழ வர்றவங்க கல்ப்பை சுத்தமா வச்சுக்கங்க!”
“லைப்பாய் சோப் போட்டு கல்ப்பை கழுவிக்கிரம்.. போதுமா?”
“வட்டி வாங்கி தொழில் பண்றவங்க பள்ளிக்குத் தொழ வராதிங்க!”
“போடா போடா… உங்கப்பனே என்கிட்ட வட்டிக்கு பணம் வாங்கி இருக்கான்டா.. உன் ட்ரீட்மென்ட் செலவுக்கு... பைத்தியக்காரப் பயலே!”
முத்தவல்லியின் அறைக்கு முன் இருபதுக்கும் மேற்பட்ட தொழுகையாளிகள் குழுமினர்.
“இந்த அப்பாஸ் அப்ரிதியின் அட்டூழியம் வரவர தாங்க முடியல. அவன் பள்ளிக்குள் நுழையக்கூடாதுன்னு தடை போடுங்க….”
முத்தவல்லி சிரித்தார்.
“அவன் எல்லா கசப்பான உண்மைகளையும் பப்ளிக்ல போட்டு உடைக்கிறான்ல...”
‘தொழுகையாளிகளின் உள்ளும் புறத்தை ஆராய அவனுக்கு யார் அனுமதி கொடுத்தது?”
“யாரும் அனுமதி கொடுக்கல…. அந்த உரிமையை அவனே எடுத்துக் கொண்டான்... அவன் இந்த மஹல்லாவின் மனசாட்சி!”
“ரொம்ப சந்தோஷப்படாதிங்க… நாளைக்கு உங்களையும் இமாமையும் பத்தி அவதூறு பேசுவான்!”
“நாங்கள் தவறு செய்யவில்லை. தவறு இருப்பது தெரிந்து அவன் சொன்னால் எங்களை நாங்கள் திருத்திக் கொள்கிறோம்!”
“நீங்கள் பேச வேண்டியவைகளை அவனை விட்டுப் பேசி வன்மம் தீர்த்துக் கொள்கிறீர்களா முத்தவல்லி?”
“ஒரு நாளும் அப்படி நான் செய்ய மாட்டேன்!”
“அப்பாஸ் அப்ரிதியை தொடர்ந்து நம் மஸ்ஜித்துக்குள் அனுமதித்தீர் என்றால் நாங்கள் இனிமேல் வேறு பள்ளிக்கு தொழப் போய் விடுவோம்!”
அப்ரிதியின் தந்தைக்கு கைபேசினார் முத்தவல்லி “அஸ்ஸலாமு அலைக்கும் இனி நம் பள்ளிக்கு உங்கள் மகன் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்...”
வேறொரு பள்ளியில்….
அப்பாஸ் அப்ரிதி நின்று கொண்டு தொழுகையாளிகளின் நெகடிவ் அம்சங்களைப் போட்டு தாளித்துக் கொண்டிருந்தான்.