ஐயாயிரம் சதுர அடியில் மூன்று மாடி கட்டடமாய் நிமிர்ந்திருந்தது அந்த பங்களா. போர்டிகோவின் உள்வாசலில் புனிதகாபா பளிங்குக்கல் செவ்வக ஓடு சுவற்றில் ஒட்டப்பட்டிருந்தது. வெளிவாசலில் ‘ரசூல் பீவி மன்ஜில்’ என்கிற பல்வர்ண பெயர்ப்பலகை பளபளத்தது.
ஊஞ்சலில் அமர்ந்து கால்களால் தரையை உதைத்து உதைத்து ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தார் மிஷ்பா அஷ்ரப். வயது 59. 170 செமீ உயரம். சம்மர் கிராப்பிய தலை கேசம். மீசையுடன் இணைந்த அழகிய குறும்தாடி. பால்
வெண்மையில் பளபளக்கும் பற்கள். சுருமா ஈஷிய கண்கள். ஜிப்பா கிப்ஸ் லுங்கி. கோவையில் ஒரு மிகப்பெரிய வெட் கிரைண்டர் தொழிற்சாலை நடத்துகிறார். மூத்தமகன் அமெரிக்காவில் மனைவி மக்களுடன் இருக்கிறான். இரண்டாவது மகன் எம் பி ஏ முடித்துவிட்டு தந்தையின் வியாபாரத்துக்கு துணை நிற்கிறான்.
சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள் ரசூல் பீவி. மிஷ்பா அஷ்ரப்பின் மனைவி, வயது 52. காயல்பட்டினவாசி. உயரம் 160 செமீ. சங்கீதக் குரல். நீரிழிவு நோயாளிகளுக்கான பானம் என்சூரை ஒரு மெலாமைன் கோப்பையில் நிறைத்துக் கொண்டு வந்து கணவரிடம் நீட்டினாள் ரசூல்பீவி.
“அஸ்ஸலாமு அலைக்கும் ஜனாப் இண்டஸ்ட்ரியலிட்!”
“வஅலைக்கும் ஸலாம் காயல்பட்டினத்தின் பேரழகியே!”
“யாரு நான் பேரழகியா? நிஜ பேரழகிகள் எல்லாம் உங்க கூடச் சண்டைக்கு வந்திரப் போராங்க!”
“ மறுமையில் எனக்கு சொர்க்கம் கிடைத்தால் சொர்க்க கண்ணழகிகளை வேண்டாம் என்பேன். என் ரசூல் பீவியே போதும் என்பேன்!”
“இன்னும் இரவுகளில் என்னை தொந்திரவு செய்கிறீர்கள்!”
“நீ என் ஹலாலான மனைவி. தாம்பத்யத்திற்கு தேவையான சக்தியும் விருப்பமும் உன்னிடமும் இருக்கிறது என்னிடமும் இருக்கிறது. உன்னைத் தொந்தரவு செய்தால் என்ன? அல்லாஹ் நம் காதலைப் பார்த்துப் பெருமகிழ்ச்சி அடைவான்!”
“ எதிர்பாராதவிதமாக நான் கர்ப்பமுற்று விட்டால் என்ன செய்வீர்கள்?”
“மகள் பிறந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவேன்!”
“பேரக்குழந்தைகள் தவழும் வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுறதைப் பார்!”
சிரித்தார் மிஷ்பா அஷ்ரப்.
“நீ என்சூர் குடித்தாயா?”
“குடிக்காவிட்டால் மடியில் படுக்க வைத்து சங்கில் புகட்டி விடுவீர்கள். அந்த அவஸ்தைக்கு பயந்து நானேக் குடித்து விட்டேன்!”
“ஆயிரம் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களை எடுத்துக்கொள். அதில் ஓரிருவர்தான் வாலிப வயது வனப்பை தொடர்கிறார்கள். மீதி பேரெல்லாம் வாடிவதங்கி சுருங்கிய கத்தரிக்காய் ஆகி விடுகிறார்கள்!”
“காலையில் இந்த ஆராய்ச்சி தேவையா? உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. அதனால் உங்களுக்குத் தேவதையாகத் தெரிகிறேன். அதே நான், உங்களுக்கு என்னைப் பிடிக்காவிட்டால் சைத்தான் போல தெரிவேன்!”
“மனோதத்துவம் பேசுகிறாய்?”
யாரோத் தொண்டையைச் செருமும் சத்தம் கேட்டது.
திரும்பினார் மிஷ்பா அஷ்ரப்.
இளையமகன் ஷுஐபு நின்றிருந்தான். அம்மா ஜாடை. அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“அத்தா!”
“என்னப்பேன்?”
“அம்பதாயிரம் வெட்கிரைண்டர்களுக்கு கொட்டேஷன் கேட்டிருக்காங்க ஒரு வட இந்தியக் கம்பெனி!”
“சரி!”
“அந்தக் கம்பெனியின் பெயர் என்ன?”
“மார்த்தா அண்ட் மார்த்தா!”
“எத்தனைக் கம்பெனிகள் கொட்டேஷன் அனுப்புவார்கள் என எதிர் பார்க்கிறாய்?”
“எட்டு நிறுவனங்கள் நம்மையும் சேர்த்து!”
“இந்த ஆர்டர் நம்மை விட்டு போகக் கூடாது மகனே!”
“இன்சைடர்ஸ் வைத்து மற்ற கம்பெனிகளின் கொட்டேஷன்களை மோப்பம் பிடிக்கவா?”
“அதனை ஒரு போதும் செய்யாதே!”
“சரி!”
“எட்டு நிறுவனங்களின் புராடக்டோடு நம் புராடக்ட்டின் தரத்தை ஒப்பிட்டுப் பார். அவர்கள் லாபம் 20 சதவீதம் வைக்கிறார்கள். என்றால் நமது லாபத்தை 5 சதவீதமாக நிர்ணயி. தரத்தாலும் விலை குறைப்பாலும் மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடு. முன் பணம் கேட்காதே. ஆர்டரை டெலிவரி செய்த பின் பேமென்ட் பண்ணினால் போதும் என சொல்லு!”
“சரி!”
“அவர்களுக்கான ஆர்டரை நாம் தயார் செய்யும் போது பொருளின் புதிய தரத்தை அம்சங்களைச் சேர்!”
“சேர்க்கிறேன்!”
“இந்த ஆர்டர் கிடைத்தால் தொழிலாளர்களின் ஊக்கத்தொகையை உயர்த்து!”
“உயர்த்துகிறேன்!”
“தொழும்போது அல்லாஹ்விடம் இந்த ஆர்டர் கிடைக்க துஆ பண்ணு. நானும் பண்ணுகிறேன்!”
“ஓகே!”
“இரண்டரை லிட்டர் வெட்கிரைண்டர்தானே கேட்டிருக்காங்க!”
“ஆமாம்!”
“விலை என்ன கோட் பண்ணலாம்?”
“ஏழாயிரம் ரூபாய்!”
“ஐம்பாதாயிரம் வெட்கிரைண்டர்களுக்கு எவ்வளவு தொகை வருது?”
“முப்பத்தியைஞ்சு கோடி!”
“நமக்கு எவ்வளவு கிடைக்கும்?”
“ஒண்ணே முக்கால் கோடி நமக்கு கிடைக்கும்”
“மகிழ்ச்சி!”
“இந்த ஆர்டரைப் பிடித்துத் தர இடைத்தரகர்கள் வந்தால் என்ன செய்ய? இரண்டு லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை கமிஷன் கேட்பார்கள்!”
“இடைத்தரகர்களைத் தூக்கி எறி!”
“அத்தா! இந்த ஆர்டரை தகுதியின் அடிப்படையில் தரத்தின் அடிப்படையில் பெற்றேத் தீருவோம். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்!”
மகன் போகும்வரை காத்திருந்தாள் ரசூல் பீவி.
“நான் ஒண்ணு சொன்னா நீங்க கோவிச்சுக்கக் கூடாது!”
“சொல்லு!”
“ஏழு தலைமுறைக்குத் தேவையான பணத்தை சம்பாதிச்சிட்டீங்க. இன்னும் பணம் பணம்னு தேடி ஓடினா எப்படி? அமைதிப்படுங்கள். இளைப்பாருங்கள், கூடுதல் இபாத்துகளை செய்து மறுமைக்குத் தயாராகுங்கள்!”
“இம்மை முதல் தாள் தேர்வு என்றால் மறுமை இரண்டாம் தாள் தேர்வு. இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற விரும்புகிறேன். ஹலாலான உணவு - ஹலாலான தாம்பத்யம் - ஹலாலான வருமானம் இறைவன் அனுமதிக்கிறான். நான் வியாபாரத்தை நியாயமான முறையில் செய்து பொருத்தமான லாபத்தை அடைகிறேன். இந்த ஒண்ணே முக்கால் கோடி லாபம் கிடைத்தால் பத்து ஏழைகளுக்குத் திருமணத்தை நடத்துவேன். இருபது ஏழை முஸ்லிம்கள் உம்ரா நிறைவேற்ற உதவுவேன். இஸ்லாமியர்களுக்கான ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க பிரதான பங்கு தருவேன். தொழுகை, நோன்பு, ஜக்காத், சதகாவுடன் கூடிய என் உழைப்பு ஊமை தூக்கத்துக்கு ஓலை வாங்கும் வரை தொடரும். முதுமையில் சுறுசுறுப்பான இயக்கம்
இறைவனின் அருட்கொடை. ஹலாலான வியாபாரத்தை என் மகனுக்கு எத்தி வைக்கிறேன். என் மகன் என் பேரனுக்கு ஹலாலான வியாபாரத்தை எத்தி வைப்பான். ஹலாலான வியாபாரத்தில் கிடைக்கும் வெற்றியை இளைய தலைமுறைக்கு
சமர்ப்பிக்கிறேன்!”
“ரைட்டோ கணவரே!”
“இன்றிரவு மேடம் ப்ரீயா?”
“ஏன்?”
“மல்லிகைப்பூ அல்வாவுடன் வருகிறேன். இன்ஷா அல்லாஹ் வி வில் ஹாவ் ரொமான்ஸ்!”
நாணிக் கோணினாள் ரசூல் பீவி.
“சரி கிழவா!”