திருநெல்வேலி பேட்டை ரஹ்மானியா பள்ளி.
‘கோடைக்கால தீனிய்யாத் பயிற்சி முகாம்’ என்கிற விளம்பரப் பதாகை வெளிவாசலில் கட்டப்பட்டிருந்தது.
அந்தப் பதாகையில், “01.05.2025 முதல் 31.5.2025 வரை, தினமும் காலை பத்து மணியிலிருந்து பனிரெண்டு மணி வரை ஆண்- பெண்கள் இருவரும் கலந்து கொள்ளலாம். வயது 9லிருந்து 17 வரை. அனுமதி இலவசம்” என்று இடம் பெற்றிருந்தன.
மரத்தடியில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் வந்திறங்கினார் எம்.ஏ. ஷாகுல் ஹமீது ஜலாலி.
அவரைத் தொடர்ந்து மௌலானா சுல்தான் அலாவுதீன் பாஸி ஹழ்ரத்தும் மௌலானா அர்ஷத் காஷிபியும் வந்து சேர்ந்தனர்.
அவர்களிருவரும் ஷாகுல் ஹமீது ஜலாலிக்கு தீனிய்யாத் வகுப்பு நடத்துவதில் உதவி செய்ய வந்திருக்கின்றனர்.
தலையில் தொப்பியுடன் கையில் கித்தாப்புடன் சிறுவர்களும் ஹிஜாப் அணிந்த சிறுமிகளும் வர ஆரம்பித்தனர்.
உள்ளறையில் சிறுவர்களுக்கு தனியாக கம்பளமும், சிறுமிகளுக்குத் தனியாக கம்பளமும் விரிக்கப்பட்டிருந்தன.
பத்து வயது மெஹர் பானுவும் 12 வயது உஸ்மான் அலியும் ஷாகுல் ஹமீது ஜலாலியை பார்த்து “அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்!”
“வலைக்கும் ஸலாம் என் செல்லங்களா!”
“சில கேள்விகள் கேட்கலாமா ஹஜ்ரத்?”
“ஒவ்வொருவரா கேளுங்கள்!”
“தீனிய்யாத் என்றால் என்ன?” மெஹர் பானு
“மதக்கல்வி அல்லது இஸ்லாமியக் கல்வி என்று பொருள். பள்ளிகளில் முழுப் பரிட்சைக்குப் பிறகு கோடைகால விடுமுறை விட்டிருப்பார்கள் இல்லையா? அந்த விடுமுறை காலத்தில் தீனிய்யாத் வகுப்புகள் நடத்துகிறோம். மொத்தம் 30 நாட்கள் 60 மணி நேரம்… மார்க்கத்தைப் பற்றி ஓரளவு தெரிந்தவருக்கும் மார்க்கத்தைப் பற்றி எதுவுமேத் தெரியாதவருக்கும் இந்த தீனிய்யாத் கோடைகால பயிற்சி முகாம் மிக மிக உதவியாக இருக்கும்!”
“இந்தப் பயிற்சி முகாம் நடத்த உங்களுக்குச் சம்பளம் தருவார்களா?”
“இல்லை.. இது மார்க்கச் சேவை”
“உங்களுக்கு உதவியாக வந்திருக்கிறவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?”
“ரியாலுள் ஜினான் அரபுக் கல்லூரியிலிருந்து!”
“தீனிய்யாத் பயிற்சி முகாமில் என்னென்ன சொல்லித் தருவீர்கள் ஹஜ்ரத்?”
“நல்ல கேள்வி, குர்ஆனை ஓதுவது சூரா மனப்பாடம், ஹதீஸ் -துஆ சுன்னத், ஹதீஸ் மனப்பாடம், கொள்கை மஸாயில் – கொள்கைகள், தொழுகை, மார்க்கச் சட்டங்கள் (அகாயித்), இஸ்லாமியப் பயிற்சி - இஸ்லாமியப் பொது அறிவு, பயான் துஆ, நபி வரலாறு, நற்பண்புகள் (அக்லாக்- குணநலங்கள்), மொழி - அரபியும் உர்துவும் அறிமுகம். தொழுகை நடத்தவும் பாங்கு ஓதவும் பயிற்சி!”
“பாங்கில் இரு வகைகள் உண்டா?”
“அதான் மற்றும் இகாமத். பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைப்பது அதான். தொழுகை தொடங்குவதற்கு முன் சொல்லப்படும் வசனம் இகாமத்!”
“பள்ளியில் பாங்கு ஓதுபவருக்கு என்ன பெயர்?”
‘முஅத்தின்!”
“தினம் இரண்டு மணி நேரம் நாக்கு வரள வரள நாங்கள் உட்கார்ந்திருக்க வேண்டுமோ?”
“கவலைப்படாதீர்கள் உங்களுக்கு சமோசா, பிஸ்கட், தேனீர் வழங்கப்படும். தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டே நீங்கள் மார்க்கத்தை கற்றுக் கொள்ளலாம்…”
“ஒரு கோக்குமாக்கான கேள்வி!”
“கேளுங்கள்!”
“பொதுக்கல்வின்னா ஆறாம் வகுப்புக்கான பாடத்திட்டம் தமிழ்நாடு முழுக்க ஒரே மாதிரி இருக்கும். தீனிய்யாத் பாடதிட்டம் தமிழ்நாடு முழுக்க ஒரே மாதிரி இருக்குமா?”
“இல்லை. பல பாடத்திட்டங்கள் உள்ளன. அன்வாரூஸ் ஸுஃப்பாவின் தீனிய்யாத் பாடத்திட்டம், ரவ்ளாத்துல் ஜன்னாத் பாடத்திட்டம் என பல பாடத்திட்டங்கள் உள்ளன. எங்களது பாடத்திட்டம் எல்லா நன்மையான விஷயங்களையும் கலந்து கட்டி செய்யப்பட்ட சித்ரான்னம். கூடிய விரைவில் பொதுப் பாடத்திட்டம் அமுலாகும் என நம்புகிறேன்!”
“முகாமுக்கு எத்தனை மாணவர்கள் அனுமதிப்பீர்கள்?”
“அறுபது சிறுவர்கள் இருபது சிறுமிகள். கூடக்குறைய இருந்தாலும் பிரச்சனை இல்லை!”
“இன்னொரு முக்கியமான கேள்வி!”
“கேளுங்கள்!”
“இஸ்லாம் ஒரு கடல். முப்பது நாட்களில் அறுபது வருட சுவாசக் காற்றை ஒருவர் எப்படி சுவாசிக்க முடியும்? எல்லாவற்றிலும் அரைகுறையாய்ச் செய்யும் முயற்சிதானே, இந்தக் கோடைகால முகாம்!”
“ஒரு பெரிய ஐஸ்கிரீம் பார்லரின் முன் ஒருவர் நின்று வருபவருக்கும் போபவருக்கும் ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீம் இலவசமாக தருவார். அதனை வாங்கிச் சுவைக்கும் பத்தில் எட்டு பேர் பார்லரின் ஐஸ்கிரீமை விலைக்கு வாங்கிச் சுவைப்பர். இது ஒரு யுக்தி. இது ஒரு அழகிய அறிமுகம். துப்பறியும் நாவலின் முதல் பக்கம் வாசகரை 200 பக்கங்கள் வரை இழுத்துச் செல்லும். முகாமுக்கு வரும் எண்பது பேரில் ஒரு பத்து பேர் தொடர்ந்து இஸ்லாமைக் கற்றாலேப் போதுமானது!”
“முகாம் முடிவில் என்ன தருவீர்கள்?”
“என் செலவில் உனக்கு ஒரு பைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கித் தருகிறேன். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்குவோம்!”
“எவ்வளவு பொறுமையாக பதவிசாக நளினமாக பதில் கூறுகிறீர்கள் ஹஜ்ரத்”
“தீனிய்யாத் பணி மேற்கொள்ளும் அனைவரும் என்னைப் போலதான் இருப்பார்கள். சாந்தியும் சமாதானமும் கொண்ட மார்க்கத்தை அதே இதம் பதத்தால் சொல்வதுதானே முறை? உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பதினைந்து
வருடங்களுக்கு முன் தீனிய்யாத் வகுப்பில் கலந்து கொண்ட ஒருவர் இன்று சென்னை பள்ளிவாசல் ஒன்றில் இமாமாக இருக்கிறார்!”
“கேள்விகள் அவ்வளவுதான்.. நாங்கள் போய் அமர்கிறோம்!”
“நான் உங்களைச் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்!”
“கேளுங்கள்!”
“உன் பெயர் என்ன பேத்தி?”
“என் பெயர் மெஹர் பானு. ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். பாஸ் பண்ணி ஆறாம் வகுப்பு போக இருக்கிறேன்!”
“உன் பெயர் என்ன பேரனே?”
“என் பெயர் உஸ்மான் அலி வயது 12. ஏழாம் வகுப்பு படிக்கிறேன். பாஸ் பண்ணி எட்டாம் வகுப்பு போக இருக்கிறேன்!”
“உங்களிருவருக்கும் மார்க்கத்தைப் பற்றித் துளியும் தெரியாதா?”
“இல்லை. நாங்கள் இருவரும் தனித்தனியாக தினம் மதரஸா போய்க் கொண்டிருக்கிறோம்!”
“அப்புறம் ஏன் இங்கு வந்தீர்கள்?”
“புது அனுபவம் தேடி. புது நண்பர்கள் தேடி. கற்றுக் கொள்ளும் மனோபாவத்தை அதிகபடுத்த. கற்றுத் தரும் உங்கள் வித்வத்தை ஊக்கப்படுத்த!”
“மாஷா அல்லாஹ்… போய் அமருங்கள்!”
-முப்பது நாட்கள் ஷாகுல் ஹமீது ஜலாலி இஸ்லாமின் விழுமியங்களை, கோட்பாடுகளை தாய்ப் பறவை குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவது போல பக்குவமாய் இளைய தலைமுறைக்கு ஊட்டினார்.
முப்பதாவது நாள் ஜலாலி உஸ்மான் அலியை எழுப்பினார்.
“உன்னால் பாங்கு சொல்ல முடியுமா?”
“இதோ சொல்றேன்!”
இருகட்டை விரல்களை இரு காதுமடல்களின் அடியில் வைத்து, “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் (4தடவை) அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் (2 தடவை) அஷ்ஹது அன்ன முஹம்மதுன் ரசூலுல்லாஹ் (2தடவை) ஹய்யா அலாஷ் ஸலாஹ் (2தடவை) ஹய்யா அலாஷ் பலாஹ் (2தடவை) அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் (2 தடவை) லா இலாஹ இல்லல்லாஹ் (1 தடவை)…” பாங்கு சொன்னான் உஸ்மான் அலி.
ஷாகுல் ஹமீது ஜலாலியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது.
“உன் பாங்கை பிலால் (ரலி) கேட்டிருந்தால் மிக மகிழ்ந்திருப்பார்!”
“இன்ஷா அல்லாஹ்… வருகிற வெள்ளிக்கிழமை ஜுஆம்மா தொழுகையை இமாமாக இருந்து நடத்திக் காட்டுகிறேன், அனுமதி தாருங்கள்!”
“குர்ஆன் முழுக்கப் பார்க்காமல் ஓதி காட்டுகிறேன்! என்றாள் மெஹர் பானு.
“தீனிய்யாத்தின் நோக்கம் நிறைவேறியது. இறைவனுக்கு நன்றி!” பரவசமாய் இரு கைகளை வானுக்கு உயர்த்தி மிழற்றினார் ஷாகுல் ஹமீது ஜலாலி.