விடியற்காலை மணி 4.30.
படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார் நூர்சேட்.
“ யா அல்லாஹ்!” சுவற்றில் இருக்கும் நாட்காட்டியைப் பார்த்தார் சேட்.
நாட்காட்டி 11.07.2025 வெள்ளிக்கிழமை என்றது.
“எனது வாழ்நாளில் இன்னொரு வெள்ளிக்கிழமையைப் பரிசளித்தமைக்கு இறைவனுக்கு நன்றி!” எழுந்தார். பக்கத்தில் தூங்கும் மனைவியை வெறித்தார்.
நூர்சேட்டுக்கு வயது 50. மகள் திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பூரில் வசிக்கிறாள். மகனுக்குத் திருமணமாகவில்லை. ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறான். நூர்சேட் லெதர் பேக், ரெக்ஸின் பேக் மொத்த விற்பனையாளர்.
மனைவியை இதமாக எழுப்பினார். “இன்னைக்கி வெள்ளிக்கிழமை தூங்கலாமா? எந்திரி எந்திரி!”
இயந்திர மனுசி போல எழுந்தமர்ந்தாள்.
“அஸ்ஸலாமு அலைக்கும் கதீஜா”
“வஅலைக்கும் ஸலாம்!”
“தூங்கும் மகனை எழுப்பி டீ போடு. பல் துலக்கி விட்டு டீ குடிப்போம். அதன் பின் ஒருவர் பின் ஒருவராக குளிப்போம். நானும் மகனும் பள்ளிக்கு பஜ்ர் தொழப்போகிறோம். நீ வீட்டில் தொழு!”
அம்மா எழுப்ப லேசான எரிச்சலுடன் மகன் எழுந்தான்.
அழகிய முகமன் பரிமாற்றம்.
தந்தையும் மகனும் பல் துலக்கினர். தலைக்கு ஷாம்பும் முகத்திற்கு பேஷ் வாஷும் இட்டு குளித்தார் நூர்சேட்.
குளிக்கும் போது நாகூர் ஹனீபாவின் பாடலைச் சப்தமாகப் பாடினார்.
“அல்லாஹ்வை நாம் தொழுதால்
சுகம் எல்லாமே ஓடிவரும்
அந்த வல்லோனை நினைத்திருந்தால்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும்!”
தலையைத் துவட்டியபடி குளியலறையிலிருந்து வெளிப்பட்டார்.
வெள்ளை பைஜாமாவும் வெள்ளை ஜிப்பாவும் அணிந்து கொண்டார். தலையில் வெள்ளை நிற துணித்தொப்பி. அத்தர் பூசிக் கொண்டார்.
மகனுடன் பள்ளிக்குப் புறப்பட்டார்.
இமாமுடன் சேர்ந்து மொத்தமே 11 பேர் தான் தொழுதனர்.
இருவரும் வீடு திரும்பும் போது சேட்டின் மனைவி குர்ஆன் ஓதிக் கொண்டு இருந்தாள். வீடு முழுக்க சுத்தம் செய்யப்பட்டு சாம்பிராணி புகை கமழ்ந்தது.
மகன் மட்டன் ஸ்டாலுக்கு போய் ஒரு கிலோ தொடைக்கறியைத் தனிக்கறியாக வாங்கி வந்தான். நூர்சேட் ஒரு 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து 25 இருபது ரூபாய் நாணயங்கள் மாற்றினார்.
பிரியாணிக்குத் தேவையான வெள்ளைப்பூண்டு, வெங்காயம், தக்காளியை அரிந்து முந்தின நாளே பத்திரப்படுத்தி இருந்தாள் கதீஜா.
“யாநபி ஸலாம் அலைக்கும்
யா ரசூல் ஸலாம் அலைக்கும்
யாஹபீப் ஸலாம் அலைக்கும்
ஸலவாத்துல்லா அலைக்கும்!”
பாடல் வீடு முழுக்க ஒலித்தது. காலையில் தலைக்கறி தக்கடியும் இனிப்பு சுத்திரியானும் செய்தாள் கதீஜா.
நூர்சேட்டின் வியாபார நண்பர் சின்னராசு வாசலின் அழைப்பு மணியை அமுக்கினார். கதவைத் திறந்து விட்டார் நூர்சேட்.
“வணக்கம் நூர்சேட் பாய்!”
“மகிழ்ச்சி. வாருங்கள் உள்ளே சின்னராசு!”
“என்ன… இன்னைக்கி உங்க வீட்ல விசேஷமா? வீட்டுக்குள்ள நுழையும் போதே சமையல் வாசனை தூக்குது?”
“இன்று வெள்ளிக்கிழமை…”
“வெள்ளிக்கிழமை கடைக்கு லீவு விடுவீங்க. வாராவாரம் வர்ற வெள்ளிக்கிழமைக்கு எதற்கு இத்தனை ஆரவாரம் கொண்டாட்டம்?”
“வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை தொழுவோம். ஸோ வெள்ளிக்கிழமை ஏழைகளின் பெருநாள். எங்களுக்கு வருடத்திற்கு எத்தனை பண்டிகைகள் என நினைக்கிறீர்கள்?”
“ரம்ஜான் பக்ரீத் என இருபண்டிகைகள் மட்டுமே எனக்கு தெரியும்?”
“வருடத்திற்கு 52 வெள்ளிக்கிழமைகள் இல்லையா? ஈகைத்திருநாள், தியாகத்திருநாளுடன் சேர்ந்து 54 பண்டிகைகள் கொண்டாடுகிறோம்!”
“ஆஹா!”
“இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். . 'நாம் பிறப்பால் பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப்பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டார்கள். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான்.. மக்கள் நம்மையே பின் தொடர்கிறார்கள். எவ்வாறெளில் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை ஜும்ஆ என்றால் யூதர்கள் சனிக்கிழமை அன்றும், கிறிஸ்துவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்றும் வார வழிபாடு நடக்கின்றனர்’
அபூ ஹுரைரா (ரலி) ஸஹீஹ் புகாரி 876 அத்தியாயம் 11 ஜும்ஆத் தொழுகை!”
“இந்துக்களாகிய எங்களுக்கு வெள்ளிக்கிழமை வழிபாட்டு நாள்!”
“ஓஹோ!”
“உங்கள் வெள்ளிக்கிழமை தொழுகை அவ்வளவு புனிதமான விஷயமா?”
“ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பு போல குளித்துவிட்டுப் பின்னர் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டை குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்பு உடைய ஆட்டை குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியை குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் ஒரு முட்டையை குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கிறார்கள் என்கிறார் எங்கள் நபிகள் நாயகம். ஜும்ஆ தொழுகைக்குக் குளிப்பதும், பல் துலக்குவதும், நறுமணம் பூசிக் கொள்வதும் சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்வதும் சிறப்பு…”
“முஸ்லிம்கள் ஒவ்வொரும் ஜும்ஆ தொழுகையுடன் கூடிய வெள்ளிக்கிழமையை ஏழைகளின் பெருநாளாகக் கொண்டாடுகிறார்களா?”
“ சிலர் கொண்டாடுகிறார்கள் பலர் கொண்டாடுவதில்லை!”
“வாரத்தில் 35 கட்டாயத் தொழுகைகள் உள்ளன. ஜும்ஆக்கு மட்டும் எதற்கு விசேஷக் கொண்டாட்டம் என நினைத்திருப்பார்களோ?”
“இருக்கலாம்!”
“மத்தவங்களை விடுங்க பாய். நீங்கள் எப்படி ஏழைகளின் பெருநாளைக் கொண்டாடுவீர்கள், அதனைச் சொல்லுங்கள்!”
“வியாழன் இரவு அன்றே என் கை, கால்கள் பரபரக்கும். நள்ளிரவில் தஹ்ஹஜத் தொழுது விட்டு பஜ்ரு தொழுகைக்காக காத்திருப்போம். காலை குளித்து பல் துலக்கி புத்தாடை உடுத்தி பஜ்ரு தொழுகை தொழப் போவோம்.. மனைவி திருக்குர்ஆன் முழுமையாக ஒரு தடவை ஓதி விடுவார்கள். காலை உணவுக்கு பின் மனைவி பிரியாணி சமைக்க ஆரம்பித்து விடுவார். நண்பகல் 12 மணிக்கு இரண்டாவது புத்தாடை அணிவேன். தலைக்கு துருக்கித் தொப்பி. தொழுகை விரிப்பும் எடுத்துக் கொள்வேன். எங்கள் வீட்டைச் சுற்றி ஐந்து பள்ளிவாசல் உள்ளன. தூரத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு நடந்து போவேன். ஒளு செய்துவிட்டு பள்ளியின் முதல் தொழுகையாளியாக பள்ளிக்குள் பிரவேசிப்பேன். இமாம் பயான் ஆரம்பிக்கும் வரை திக்ர் எடுத்துக் கொண்டிருப்பேன். தொழுகைக்கு வரும் ஒவ்வொரு தொழுகையாளியின் வெளிப்புறத் தோற்றத்தை உள்புறமனப்பாங்கை ஊன்றிக் கவனிப்பேன். இமாமின் பயானை ஊன்றிக் கவனிப்பேன். தொழுது முடித்த பின் பக்கெட் ஏந்தி வரும் மோதினாரின் பக்கெட்டில் 100 ரூபாய் இடுவேன். தொழுகை முடிந்ததும் நெருங்கிய நண்பர்களை முஸாபஹா செய்வேன்.. டேபிள் போட்டு அமர்ந்து மதரஸா பணிக்கு ஹதியா வசூலிக்கும் நிர்வாகியிடம் 500 ரூபாய் கொடுத்து ரசீது பெறுவேன். வெளியில் நிற்கும் 25 மிஸ்கீன்களுக்கு தலா ஒரு 20 ரூபாய் நாணயம் வழங்குவேன். மகன் 11 ஏழைகளுக்கு பிரியாணி பொட்டலம் வழங்கி விட்டு வருவான். மனைவி பக்கத்து வீடுகளுக்குப் பிரியாணி கொடுத்து விடுவாள். அதன் பின், நான் என் மனைவி மகன் மூவரும் அமர்ந்து சாப்பிடுவோம்… மதியம் ஒரு மணி நேரம் ஓய்வு. பின் அஸர், மஹ்ரீப், இஷா தொழுகைகளைத் தொழுவோம். ஏழைகளின் பெருநாள் நிறைவு பெறும்!”
- ஜும்ஆ தொழுதுவிட்டு மிஷ்கீன்களுக்கு காசு கொடுக்கும் நூர்சேட்டை ஒரு குரல் தடுத்தது.
“ஒரு இரண்டு வயது குழந்தை நான்காவது மாடிலியிருந்து விழுந்து மரணக் காயப்பட்டு உள்ளது. அந்தக் குழந்தையின் உயிரைக் காக்க நீ என்ன தருவாய் நூர்சேட்?”
“நாற்பது வருடங்களாகத் தொழுது வருகிறேன். என்னுடைய பத்து வருடத் தொழுகை நன்மைகளை (அல்லாஹ் அந்த பத்து வருடத் தொழுகையை நன்மை என அங்கீகரித்திருந்தால்) குழந்தைக்கு ஹதியா செய்கிறேன்.. அல்லாஹ் அந்தக் குழந்தையை முழுமையாகக் குணப்படுத்தட்டும்….”
ஆமீன் ஆமீன் ஆமீன் என லட்சக்கணக்கான மலக்குகளின் குரல்கள் கோரஸாய் ஒலித்து எதிரொலித்து ஏழாம் வானம் தொட்டன.