வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை தொழுதுவிட்டு தந்தை முஸ்தபாவும் 15 வயது மகன் ஆரிப் முகமதுவும் வீடு திரும்பினர்.
கைகால் முகத்தை கழுவி விட்டு இருவரும் சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.
நெய்ச்சோறும் மட்டன் குழம்பும்.
முஸ்தபா ஒரு நல்லி எலும்பை எடுத்து உறிஞ்சினார்.
“அத்தா!”
“என்னப்பேன்?”
“இன்னைக்கி இமாம் பயான் பண்ணும் போது நாதாக்கள் தபஅத்தா பிஈன்கள் தாபியீன்கள் என வரிசையாக இறை நல்லடியார்களைப் பற்றி பட்டியல் கூறினார். தாபியீன்கள் என்றால் யார்? அவர்களைப் பற்றி முழுமையாக விளக்கம் கூற முடியுமா உங்களால்?”
“நல்லது சாப்பிட்டு முடி. தாபியீன்கள் பற்றி விளக்கமாக் கூறுகிறேன்!”
இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள்.
அத்தாவின் காலடியில் அமர்ந்தான் ஆரிப். “இப்ப சொல்லுங்கத்தா!”
“தாபியீன்களை ஆங்கிலத்தில் ‘Tabi’ Un என்பர். ‘Tabieen’ எனவும் கூறுவர்.
தாபியீன்கள் நபி நாயகத்தை நேரில் சந்திக்காதவர்கள். ஆனால், நபித்தோழர்களை நேரடியாகச் சந்தித்தவர்கள். அவர்களிடமிருந்து இஸ்லாமிய அறிவைப் பெற்றவர்கள்... பொதுவாக, தாபியீன்கள் மத அறிஞர்களாகவும் இஸ்லாமியச் சட்ட வல்லுநராகவும் இருப்பர்”
“நபித்தோழர்கள் என்பவர்கள் யார்?”
“ நபிகள் நாயகத்துடன் சேர்ந்து இருந்தவர்கள். நபிகள் நாயகத்துடன் நேருக்கு நேர் பேசியவர்கள். வெறுமனே நபிகள் நாயகத்தின் முகத்தைப் பார்த்திருப்பவர்கள். நபிகள் நாயகத்தோடு இருந்தும் கண்பார்வை இல்லாததால் அவரைத் தரிசிக்க முடியாமல் போனோர், நபிகள் நாயகம் செய்த போர்களில் கலந்திருத்தல். நபிகள் நாயகம் பேச்சை மனனம் செய்தோர். இவையே நபித்தோழராக இருப்பதற்கான அடிப்படைத்தகுதிகள். நபிகள் நாயகத்தின் இறுதி ஊர்வலத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். ஒரு கணக்கு நபி தோழர்கள் மொத்தம் 114000 என கூறுகிறது. மாலிக் பின் நவேரா நபிகள் நாயகத்தை நேருக்கு நேர் சந்தித்தவர். ஆனால் நபிகள் நாயகம் மறைவுக்குப் பின் பொய் நபி சாஜாவுடன் கூட்டு சேர்ந்தார். ஆகையால், அவருக்கு நபிதோழர் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. சையதினா ஓவைஸ் கர்னி ஏமன் நாட்டை சேர்ந்தவர். தாயின் உடல் சுகவீனம் காரணமாக அவரால் நபிகள் நாயகத்தை நேரில் சந்திக்க இயலவில்லை. இருந்தாலும் அவருக்கு நபித்தோழர் அந்தஸ்து வழங்கப்பட்டது!”
“நபிதோழர்களில் சிறந்தவர்கள் யார்?”
“இமாம் அலி பி அபிதாலிப் மற்றும் அவரது மகன்கள் இமாம் அல் ஹசன், இமாம் அல் ஹுசைன்...”
“நபி நாயகத்தை நேரில் பார்த்த சிறுவர்களுக்கு தனியாக ஏதாவது ஒரு பெயர் இருந்ததா?”
“ஆம் இருந்தது. அவர்கள் ஸஹாபா அல் ஷிகார் என அழைக்கப்பட்டனர்!”
“நபித்தோழராக இருப்பது இஸ்லாமில் மிகப்பெரிய அந்தஸ்தா?”
“பின்ன?- ‘என்னைக்கண்ட முஸ்லிமையும் என்னைக் கண்டவனைக் கண்ட முஸ்லிமையும் நரகம் நெருங்காது’ என்கிறார் நபிகள் நாயகம் ஆதாரம் திர்மிதி மிஷ்காத்!”
“தாபியீன்களின் தகுதி என்ன?”
“தாபியீன்கள் ஸஹாபாக்களுக்கு அடுத்து தலைமுறை. தாபியீன் என்பவர் நபித்தோழர் யாரையாவது நேரில் கண்ணால் பார்த்திருக்க வேண்டும். அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைப்படி வாழ்ந்து மரணத்திருக்க வேண்டும். கவாரிஷியாக்களை பின்பற்றுவோர் தாபியீன்களாக இருக்க முடியாது!”
“ஓஹோ!”
“இன்னொரு ஹதீஸ் கூறுகிறேன் கேள். ‘மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர் (ஸஹாபாக்கள்) அவர்களுக்குப் பிறகு சிறந்தவர்கள் அவர்களை அடுத்து வரும் தாபியீன்கள். அவர்களுக்கு பிறகு சிறந்தவர்கள் தபஅத்தாபிஈன்கள். பின்னர் ஒரு சமுதாயத்தினர் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவருடைய சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் சாட்சியத்தை முந்திக் கொள்ளும்’ என்கிறார் நபிகள் நாயகம். ஆதாரம் ஸஹிஹுல் புகாரி 3651....”
“ஸஹாபாக்களும் தாபியீன்களும்தான் இறையடியார்களில் டாப் மோஸ்ட் இல்லையா?”
“உண்மை... ஸஹாபாக்களுக்கு அடுத்த உயரிய அந்தஸ்து தாபியீன்களுக்குத்தான். ஸஹாபாக்களிடமிருந்து பெற்ற அல்குர்ஆன் சம்பந்தப்பட்ட அறிவுகளை விளக்கங்களை அடுத்த தலைமுறைக்குச் சிறப்பாகக் கொண்டு சேர்த்தப் பெருமை தாபியீன்களுக்கு மட்டும் உரித்தானது!”
“தாபியீன்களின் பணிகள் என்னென்ன?”
“ஸஹாபாக்களிடமிருந்து கற்ற ஹதீஸ்களை அடுத்தத் தலைமுறைக்குக் கற்பிப்பது. ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் நூல் வர தாபியீன்களே அடிப்படைக் காரணம். மத்ஹபு இமாம்கள் மார்க்கச் சட்டம் இயற்ற தாபியீன்கள் கற்பித்துச் சென்ற
மார்க்க விளக்கங்களே அடிப்படை. தாபியீன்கள் அத்துடன் நில்லாது வெளிநாடுகளுக்குச் சென்று இஸ்லாமைப் பரப்பவும், பிற மதத்தினரை இஸ்லாமுக்குக் கொண்டு வரவும் தாவா பணி செய்தனர். பலவந்தம் இல்லாத சாந்தியும் சமாதானமும் கொண்ட தாவா பணி அவர்களுடையது!”
“வேறு ஏதாவது கேள்விகள்?”
“தாபியீன்களுக்குச் சீருடை உண்டா?”
“சீருடை இல்லை. மக்களோடு மக்களாகக் கலந்திருப்பார்கள்...”
“தாபியீன்களாகத் திகழ ஏதாவது பள்ளிகள் உண்டா?”
“இஸ்லாமியப் பள்ளிகளில் சொல்லிக் கொடுத்து யாரும் தாபியீன்களாக வர முடியாது. ஆனால் காசாவில் அல்தாபியீன் பள்ளியும், ஹுதைபியா சர்வதேச பள்ளியும் தாபியீன்கள் பெயரால் அமைத்துள்ளன!”
“தாபியீன்களை ஒற்றை வாக்கியத்தில் வரையறுங்கள்!”
“தாபியீன்கள் பின்பற்றுபவர்கள் அல்லது பின் தொடர்பவர்கள்!”
“அத்தா! ஒரு முக்கியமான கேள்வி. தாபியீன்களில் பெஸ்ட் 10 பேர்களை கூறுங்களேன்!”
“பத்து பேர் பட்டியல் என்னிடம் இல்லை. ஏழு பேர் கூறுகிறேன்!”
“ஓகே!”
“முதலாமவர் சயீத் இப்னு அல்-முஸய்யில். இவர் இஸ்லாமிய சட்டத்திலும் ஹதீஸ் அறிவிலும் சிறந்து விளங்கினார்!”
“சபாஷ்!”
“இரண்டாமவர் உவைஸ் அல்- கரனி. இவர் தாபியீன்களில் மிகச்சிறந்தவர் எனக் கருதப்படுகிறார்!”
“ஆஹா!”
“மூன்றாமவர். அல்-ஹசன் அல்-பஸ்ரி. இவர் ஒரு சிறந்த அறிஞர், சொற்பொழிவாளர் மற்றும் இறையியலாளர் ஆவார்!”
“ஓவ்!”
“நான்காமவர் முஹம்மது இப்னு சிரின். இவர் ஒரு பிரபலமான தாபியீன் மற்றும் ஹதீஸ் அறிஞர்!”
“நைஸ்!”
“ஐந்தாமாவர் இப்ராஹிம் அல்-நஃகை இவர் கூஃபா நகரத்தின் சிறந்த அறிஞர்!”
“பிரமாதம்!”
“ஆறாமவர் அபூ ஹனீபா அல்-நுஃமான் இப்னு சாபித். இவர் ஹனபி மத்ஹப்பின் நிறுவனர் ஆவார்!”
“சிறப்பு!”
“ஏழாமவர் அமீர் இப்னு தீனார். இவர் மக்காவில் வாழ்ந்த ஒரு தாபியீன் ஆவார்!” - சரேலென ஆரிப்பின் மனக்கண்ணில் ஆயிரக்கணக்கான தாபியீன்கள் தோன்றினர். நீள அங்கியும் தலைப்பாகையும் மீசை இல்லாத நரைத்த தாடியும்
கொண்டிருந்தனர்.
“நாங்கள் எங்கள் இறைப்பணியை முழுமையாக செய்தோம். ஆனால் எங்களுக்கு ஒரு மனக்குறை இருக்கிறது!”
“என்ன மனக்குறை?”
“நபிகள் நாயகம் காலத்தில் பிறந்து அவருடன் பேசி அவருடன் தொழுது அவரின் அறிவுரைகளை காதுறும் நபித்தோழராக நாங்கள் பிறக்கவில்லையே என்கிற மனக்குறைதான் எங்களுக்கு!”
“எனக்கொரு மனக்குறை தாபியீன்களே?”
“என்ன மனக்குறை?”
“ஸஹாபா வேண்டாம், தாபியீன் வேண்டாம், குறைந்தது நான் ஒரு சஹாபா அல் ஷிகாராக இருந்திருக்கலாமே என்கிற ஆவலாதிதான் எனக்கு!”
“மறுமை நாளில் இறைவனுக்கு அருகில் நபிகள் நாயகத்தையும் கூட்டத்தின் முன் வரிசையில் சஹாபாக்களையும், சகதாபியீன்களையும் நீயும் நானும் சந்திப்போம். மாஷா அல்லாஹ்!” தாபியீன்கள் கரைந்து மறைந்தனர்.