குளியலறையில் இருந்து வெளிப்பட்டான் முஹம்மது யூசுப். யூசுப்புக்கு வயது 21. உயரம் 170 செமீ. ரோஜா நிறம். சுருள்சுருள் தலை கேசம். உல்லாசம் நிரம்பிய கண்கள். எகிப்து மூக்கு இரத்தச் சிவப்பு உதடுகள். மெல்லிய மீசை.
பூத்துவாலையை களைந்து விட்டு கீழ் உள்ளாடை அணிந்து கொண்டான் யூசுப்.
யூசுப் இளங்கலை பௌதிகம் மூன்றாம் ஆண்டு படிப்பவன்.
உலர் சலவை செய்யப்பட்ட நீலநிற ஜீன்ஸும் வின்டேஜ் எலைட் போலோ டிசர்ட்டும் உடுத்திக் கொண்டான்.
தலைக்கு பிரில்கிரீம் தடவி வாரினான்.
வீக்டோடர்மரிக் வானிஷிங் கிரீம் பிதுக்கி முகத்தில் பூசிக் கொண்டான். அதன் மேல் கோகுல் சான்டல் வுட் பவுடர் ஒரு கோட் அடித்தான்.
ஐப்ரோ பென்சில் எடுத்து மீசையை அடர்த்தி பண்ணினான்.
ஆக்ஸ் எபக்ட் ஆப்டர் ஷேவ் லோஷன் எடுத்து இரு காது மடல்களுக்கு பின் ஒற்றினான்.
டியோடரன்ட் எடுத்து இரு அக்குள்களில் பீய்ச்சிக்கொண்டான்.
வாய்க்குள் மவுத் ரெபஷனர் தெளித்துக் கொண்டான்.
100 சதவீதம் சார்ஜ் ஏறிய திறன்பேசியை எடுத்து வாட்ஸ்அப் தகவலை சோதித்து திருப்தியாய் பேன்ட் பாக்கட்டுக்குள் செருகிக் கொண்டான்.
பர்ஸை பேன்ட்டின் பின் பாக்கட்டில் பதுக்கிக் கொண்டான்.
மெல்லியதாக “முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ இதில் பத்தி எரியாதோ” பாடலை விசிலடித்தபடி தனது படுக்கையறையை விட்டு வெளியேறினான் யூசுப்.
அம்மா அனீஸ் பாத்திமா குறுக்கிட்டாள்.
“அஸ்ஸலாமு அலைக்கும் யூசுப்!”
“வஅலைக்கும் ஸலாம். ஏம்மா வெளிய போறவன் பாதைல பூனை மாதிரி குறுக்கிடுற? என்ன வேணும் உனக்கு?”
“இன்னைக்கி ஞாயிற்றுக்கிழமை காலேஜ்க்கு லீவு நாள் தானே… இன்னைக்கு கூட நீ காலைலயே வெளிய போகணுமா?”
“மைன்ட் யுவர் வேர்ட்ஸ் மம்மி. ஒரு 21 வயது யூத்துக்கு வெளி உலகத்ல ஆயிரம் வேலை இருக்கும். தடுக்காதே ஆர்வமாய் வேடிக்கை மட்டும் பார்!”
“அதெப்படி வேடிக்கை பாக்றது? வண்டி சரியான பாதைல போகுதான்னு நான் அடிக்கடி செக் செய்யத்தான் செய்வேன்!”
“வண்டி தாறுமாறு தக்காளிச்சோறுன்னு ஓடிட்டிருக்கு குறுக்கே வராதே!”
“உன்னுடைய அத்தா உனக்கு இரண்டு வயசாகும் போதே மஞ்சள் காமாலை வந்து மௌத்தா போய்ட்டார். ஒரு மகனை தன்னந்தனியா போராடி வளர்க்கும் சிங்கிள் மதர் நான். நான் உன்னைகண்காணிக்கவே செய்வேன்!”
“இப்ப உனக்கு என்னதான் வேணும்?”
“இப்ப நீ எங்க போற? மொதல்ல அதை சொல்லு…”
“எங்கே வேணாலும் போவேன்… அத உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!”
“நீ எங்கே போவேன்னு நான் சொல்றேன்.. உங்க அத்தாவுக்கு இரண்டு மனைவிகள். நான் இளைய தாரம். நீ மூத்ததாரத்துக்கு பிறந்த மகள் பர்வீனை பார்க்கப் போற!”
“போனா என்ன?”
“பர்வீன் உனக்கு மஹ்ரமான உறவுடா… அவளை நீ கல்யாணம் செஞ்சுக்க முடியாது!”
“மஹ்ரம் என்றால் என்ன?”
“இஸ்லாம் ஒரு ஆணோ ஒரு பெண்ணோ யாராரை திருமணம் செய்து கொள்ளலாம் யாராரை திருமணம் செய்து கொள்ளக் கூடாதுன்னு கட்டுப்பாடு விதிச்சிருக்கு…”
“ஓஹோ…’
“நான் சொல்றதை உன்னிப்பா கவனி. தாய், தந்தை, சகோதரிகள், சகோதரர்கள், பாட்டி, தாத்தா, பேரன், பேத்தி, அத்தை, மாமா, தந்தையின் சகோதரி, தந்தையின் சகோதரன், தாயின் சகோதரி, தாயின் சகோதரனை மணந்து கொள்ள கூடாது. உனது இரண்டு வயதுக்குள் உனக்கு தாய்ப்பால் புகட்டிய பெண் உனக்குத் தாயானவள். அவளை நீ மணந்து கொள்ளக் கூடாது. மனைவியின் தாய், மனைவியின் மகள் (முந்தைய கணவரின் மகள்) கணவனின் தந்தை, கணவனின் மகன் (முந்தைய மனைவியின் மகன்) மணந்து கொள்ளல் கூடாது. ஒரு பெண்ணுடன் அவளுடைய சகோதரி, அவளுடைய தாயின் சகோதரி அல்லது அவளுடைய தந்தையின் சகோதரியை ஒருசேர மணக்க முடிக்க முடியாது. பர்வீன் உனக்கு அக்கா முறை ஆகிறாள். அவளை மணமுடிக்கும் ஆசை இருந்தால் அதனை இப்போதேக் கை விடு!”
“இந்துக்களில் தாய் மாமனை எல்லாம் கட்டிக்கிறாங்களே!”
“நீ சார்ந்திருக்கும் மதக்கட்டுப்பாடுகளை மதி!”
“நான் பர்வீன் வீட்டுக்கு வெறும் டைம் பாஸிங்குக்காக போகிறேன்!”
“அப்படித்தான் ஆரம்பிக்கும் ஆனால் விபரீதமாக முடியும்!”
“சரி, நான் பர்வீன் வீட்டுக்குப் போகல….”
“நீ பர்வீன் வீட்டுக்கு மட்டுமா போற… ஷெகனாஸ் வீட்டுக்கும் தான் போற….”
“ஷெகனாஸ் எனக்கு மூத்த அக்கா மாதிரி. என்னை விட 15 வயது கூட. அவங்க வீட்டுக்கு போறதில என்ன தப்பு?”
“ஷெகனாஸ் கல்யாணம் ஆனவ. அவ புருஷன் பாரின்ல இருக்கான். அவன் சம்பாரிச்சு அனுப்ற பணத்தை எல்லாம் ஷெகனாஸ் ஆடம்பர செலவு பண்ரா. தவிர, ஷெகனாஸ்க்கு பல திருமண பந்தம் மீறிய உறவுகள் இருக்கிறதா பேசிக்கிராங்க!”
“அதனால!”
“தப்பு செய்ற பெண்ணுக்கு வயசு வித்தியாசம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. உன்னை வாரி சுருட்டி முழுங்கிடுவா. பசியாக இருக்கும் மலைப்பாம்பின் முன் ஊர்வலம் போகாதே!”
“அந்தக்காவுக்கு நான் ஒரு தம்பி அவ்வளவுதான்!”
“இந்த ஈர வெங்காயத்தை எல்லாம் என் முன் உரிக்காதே!”
“சரி, அங்கயும் போகல…”
“மூணாவதாக அந்த டுபாக்கூர் மேனா மினிக்கி தானா குலுக்கி அசாருதீன் வீட்டுக்கு போகாதே!”
“ஆம்பளைக்கு ஆம்பிளை என்னம்மா பிரச்சனை?”
“அவன் குடும்பமே கஞ்சா விக்குது. அவன் பொண்டாட்டி அடிக்கடி ஜெயிலுக்கு போயிட்டு வர்றா. தினமலர்ல அடிக்கடி அவங்கள பத்தி ந்யூஸ் வருது. அசாருதீன் உனக்குக் கஞ்சாவை பழக்கி விட்ரப் போரான்!”
“அய்ய… அதெல்லாம் நான் பழக மாட்டேன்!”
“பன்னியோட சேந்த கன்னுக்குட்டியும் டேஷ் தின்னும்டா மகனே!”
“வேற எங்கங்கே போகக்கூடாதுன்னு நீயே சொல்லிடு…”
“ஆறு பொம்பிளைப்பிள்ளைகராங்க வீட்டுக்கு போகாதே!”
“ஏன்?”
“25, 22, 19, 17, 13 வயசுகள்ல பொண்ணுக சமஞ்சு கிடக்குதுக அந்த வீட்ல. ஆறு பெண் குழந்தைகளை பெத்துட்டு பொறுப்பில்லாம குடிச்சிட்டு திரியுரான் அவங்கப்பன். ஆறில ஒண்ணுக்கு கூட கல்யாணம் ஆகல. நீ ஏதாவது ஒரு குறுகுறுப்புல அவங்க வீட்டுக்குப் போய் வந்தேன்னா உன்னை கபக்குன்று பிடிச்சு போட்ருவாங்க. அவங்களை நான் இழிவா பேசல. நீ அவங்க வீட்ல ஒருத்திய நிக்காஹ் பண்ணினா மீதி அஞ்சு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கற பொறுப்பு உன் தலை மேல விழும். காலம் பூராவும் நீ போராடிக் கொண்டே இருக்கும் சூழ்நிலை வரும்!”
“நீ ரொம்ப சுயநலக்காரி அம்மா!”
“இருந்துட்டு போறேன் மீதியையும் கேளு…”
“சொல்லித் தொலை அம்மா!”
“நீ மாலிக் வீட்டுக்கு போகாதே!”
“மாலிக்குக்கு என்ன குறை? மாலிக்கு ஒரு பெரும் பணக்காரர். அவருக்கு ஒரே மகள். அவருக்கு மருமகனாக கொடுத்து வச்சிருக்கனும்!”
“பொறுடா. நாம சுன்னத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள். மாலிக் ஒரு வஹாபி. வஹாபிக்கும் சுன்னத் ஜமாஅத்துக்கும் ஒருபோதும் ஒத்து வராதுடா மகனே!”
“வஹாபிஸம் என்றால் என்ன?”
“பதினெட்டாம் நூற்றாண்டில் இப்னு அப்துல் வஹாப்பால் நிறுவப்பட்ட இஸ்லாமிய இயக்கம் வஹாபிஸமாகும். வஹாபிஸம் தீவிரவாதப் போக்கு உடையது. இஸ்லாமுக்குள் பிளைவுகளை ஏற்படுத்துகிறது. வஹாபிஸம் நவீன
கண்டுபிடிப்புகளை எதிர்க்கிறது. வஹாபிஸம் நபித்தோழர்களின் வழி மொழிகளை பின்பற்றுகிறது”
பெருமூச்சு விட்டான் முஹம்மது யூசுப்.
“நான் அறிவுரை சொன்னால் கேட்க மாட்டாய் ஒரு நபிமொழி சொல்கிறேன் கேள்… ‘கால்கள் செய்யும் விபச்சாரம் தவறான உறவைத்தேடி அடி எடுத்து வைப்பதாகும்’ என்கிறது நூல் முஸ்லிம் 5165… நீ தவறான திசையில் கால் வைக்கும் போதெல்லாம் இந்த ஹதீஸை நினை. இந்த ஹதீஸ் உன்னை காக்கும். இப்போது நீ போகலாம்!”
பைக்கை ஸ்டார்ட் செய்தான் முஹம்மது யூசுப்.
அவனின் முன் தவறான பாதைகள் நீண்டன.
திருமணம் செய்யக்கூடாத உறவு முறை பெண்ணிருக்கும் சாலை - திருமணபந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடும் பெண் இருக்கும் சாலை - போதை பொருள் விற்பனையகம் - ஆறு மகள் வீடு இருக்கும் சாலை - கொள்கை ரீதியாய் முரண்பட்டவர் இருக்கும் வீட்டின் சாலை.
நேர் வழியா, கால்களால் விபச்சாரமா?
நபிமொழி ஜெயித்தது.
பள்ளிவாசலுடன் இணைந்த இஸ்லாமிய நூலகத்தின் முன் பைக்கை நிறுத்தி ஸ்டாண்டிட்டான் முஹம்மது யூசுப்.