திறன்பேசியை உயிர்ப்பித்தாள் காலிதா பேகம். பத்து இலக்க எண்ணை அமுக்கினாள்.
எதிர்முனை , “அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா!”
“வஅலைக்கும் ஸலாம் ஆமீரா!”
“காலிதா பேகமும் ஆமீராவும் உடன்பிறந்த சகோதரிகள். காலிதா எட்டு வயது மூத்த அக்கா. ஆமீரா தங்கை. ஆமீரா பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறாள். உடன் பணிபுரிந்த லைஜால் ஜஹானை காதலித்து பெற்றோர் அனுமதியுடன் முந்தின வருடம் திருமணம் செய்து கொண்டாள். ஐந்து மாதங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் லைஜால் ஜஹான் இறந்து போனான். ஆமீரா நான்கு மாதம் பத்து நாள் இத்தா முடித்து இரண்டு வாரங்கள் ஆகின்றன.
“அழுது அழுது கரைந்து கரைந்து கணவன் இறந்த சோகத்தைத் தொலைத்து விட்டாயா ஆமீரா?”
“இம்!”
“கனவில் உன் கணவர் வருகிறாரா?”
“சில தடவை!”
“டூட்டி ஜாய்ன் பண்ணி விட்டாயா?”
“விடுமுறையை இன்னும் ஒரு மாதம் நீடித்திருக்கிறேன்!”
“உனக்கு ஆறுதலாக நான் ஏதாவது செய்ய விரும்புகிறாயா?”
“ஆமாம்!”
“என்ன செய்ய வேண்டும் சொல் ஆமீரா!”
“அக்கா உன் வீட்டில் பத்து நாட்கள் தங்கி இளைப்பாற விரும்புகிறேன்!”
“தாராளமாக வா… நீ மயிலாடுதுறையில் அம்மாவுடன் இருக்கிறாய். நாங்கள் கோயம்புத்தூர் உக்கடத்தில் இருக்கிறோம். மதியம் 3:10க்கு ஜனசதாப்தியில் ஏறு. இரவு ஒன்பது முப்பதுக்கு கோவை வந்து விடலாம். நானும் மச்சானும் ஸ்டேஷன் வந்து உன்னை ரிசீவ் பண்ணிக் கொள்கிறோம். நாளைக்கு நீ வர்ற மாதிரி டிக்கெட் ரிசர்வ் பண்ணி உன் வாட்ஸ் அப்புக்கு அனுப்பவா?”
“சரி!” - கோயம்புத்தூர் தொடருந்துச் சந்திப்பில் இறங்கிய ஆமீராவை காரில் அழைத்துக் கொண்டு வீடு சேர்ந்தனர் காலிதா- தாரிக் தம்பதிகள்.
“வாருங்கள்… மூவரும் இடியாப்பம் – பாயா சேர்ந்து சாப்பிடுவோம்!’
“நீ செய்தததை முதலில் உன் தங்கைக்குப் பரிமாறு. சாப்பிட்ட பின் அவள் உயிரோடு இருந்தால் நான் சாப்பிடுகிறேன்!”
“உங்கள் கருப்பு நகைச்சுவை ரசிக்கவில்லை… வாயை மூடுங்கள்..”
“கல்யாணத்துக்கு பின் சாப்பிடவும் கொட்டாவி விடவும் தான் வாய் திறந்திருக்கிறேன். நீ டொனால்ட் ட்ரம்ப். நான் ஒரு பாலஸ்தீன அனாதி…”
“அய்ய… ஓவரா பேசாதீங்க”
“பேசினால் என்ன செய்வ?”
“இங்க நீ புருஷனா இல்ல நான் புருஷனா?”
“ஏன் வாயை கிழிக்ற உரிமை புருஷன்களுக்கு மட்டும்தானா?”
“உன் வீடு சொந்தம் யாராவது நம் வீட்டுக்கு வந்து விட்டால் சின்னராசு உன்னைக் கைல பிடிக்க முடியாது!”
“உன் வீட்டு சொந்தம் வந்தால் நீ தலைவிரிச்சு ஆடுவ…”
“என்ன நீ வா போ போன்ற!”
“சண்டைன்னு வந்திட்டா சட்டை கிழியத்தான் செய்யும். நீ பெரிய மயிராண்டி. உன்னை ராஜா மஹாராஜா சக்கரவர்த்தின்னு கூப்பிடுவாங்க. போடா டேய்…’
“டேயா?”
“ஆமாண்டா டால்டா..”
அக்காளும் மச்சானும் உக்கிரமாகச் சண்டை போடுவதைக் கண்களைக் குறுக்கிப் பார்த்தாள் ஆமீரா.
“நிறுத்துங்க உங்க சண்டையை. உங்க சண்டையை பாக்கத்தான் என்னை மயிலாடுதுறையில் இருந்து வரவழைச்சீங்களா?”
“நீ கண்டுக்காம இரு ஆமீரா. கொடுக்றதை கொடுத்தாத்தான் இவன். குடம் கொண்டு தண்ணி எடுப்பான்… நாலு அறை அறைஞ்சாதான் அமுக்கிட்டு இருப்பான்னா நான் இவனை கும்மு கும்முன்னு கும்முட்டி வர்றேன்… சித்த பொறு!”
“நீ அடிக்றப்ப என் கை புளியங்கை பறிச்சுட்டு இருக்குமோ? வா… ஒத்தைக்கு ஒத்தை மோதி பார்த்திரலாம்!”
“பாய்ஜான்!” கத்தினாள் ஆமீரா.
“இதென்ன ரெண்டு பேரும் பேட்டை ரௌடிகள் மாதிரி சண்டை போட்டுக்கிறீங்க… பார்க்க அசிங்கமா இருக்கு!”
“உன் அக்காக்காரியை அடக்கு. என்கிட்ட வராதே!”
“ரெண்டு பேர் மேலயும் தப்பிருக்கு. ரெண்டு பேரும் அடங்குங்க!”
“உங்க வீட்ல பொம்பளை பிள்ளைகளை அடக்க ஒடுக்கமா வளக்கல. விஷஜந்துக்களா வளத்திட்டாங்க!”
“உங்க சண்டைல எங்க பெற்றோரை இழுக்காதீங்க”
“எங்க சண்டைல நீ மூக்கை நீட்டாதே. எட்டி நின்று வேடிக்கை மட்டும் பாரு. (கணவனிடம் திரும்பி) உன்னை உன் பேரன்ட்ஸ் ஒழுக்கமா வளத்திருக்காங்களா? குளிச்சிட்டு ஈரத்துண்டை பெட்ல போட்ருவ. டூத் பேஸ்ட்டை பிதுக்கி ஈரோப்பியன் கிளாசெட் மேல வைச்சிருவ. வாசல்ல கால் செருப்பை ஆளுக்கொரு திசையா உதறி விட்ருவ… அழுக்கு ஜட்டிகளை வரவேற்பறைல போட்டு வச்சிருவ… சாப்பிட்ட தட்டை என்னைக்காவது கழுவி வச்சிருக்கியாடா?”
“அது எல்லாத்தையும் ஒழுங்கு பண்றது உன் வேலைடி.”
“பொண்டாட்டியா அல்லது உனக்கு கொத்தடிமையா நான்?”
“நான் இங்கு ஆயுள் தண்டனை கைதி. நீ ஜெயில் வார்டன். நான் இங்கு எல்கேஜி மாணவன். நீ பிரம்பு வைத்து மிரட்டும் டீச்சர். நான் சம்பாதிச்சுக் கொட்டனும் நீ விரும்புறப்ப எல்லாம் தாம்பத்யம் பண்ணனும். நீ எல்லாத்தையும் அனுபவிச்சிக்கிட்டு என் மேல குதிரை சவாரி போவ…”
“என்ன பெருசா சம்பாதிச்ச? என்ன சிறப்பா தாம்பத்யம் பண்ணின? வெளில சொன்னா வெட்கக் கேடு!”
“அக்கா! போதும்கா.. எனக்கு தலை வலிக்குது! உங்க சண்டை எப்பயாவதா அல்லது தினமா?”
“புருஷன்காரன் பக்கத்து தலையணைல படுத்திருக்ற நல்ல பாம்பு. தினமும் கொத்தத்தான் செய்வான். புருஷன்காரன் இடது ஜோல்னாப் பையில் கழைகூத்தாடும் சிம்பன்ஸி. தினமும் கடிக்கத் தான் செய்யும். திருமணம் ஒரு புலி சவாரி என்பது திருமணமான உனக்குத் தெரியாதா? கல்யாணத்தைக் கண்டுபிடிச்சவன் கைல கிடைச்சான் நாலு மிதி மிதிப்பேன்!”
“என்னைச் சாப்பிட விடுவீங்களா இல்ல விடிய விடிய நான் ஸ்டாப் சண்டை போடப் போறீங்களா?”
“இருடா.. உன்னை அப்றமா பாத்துக்கிரேன். நீ குளிச்சிட்டு வந்து சாப்பிடும்மா..”
“நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள இங்க ஒண்ணும் ஆய்டாதே?”
“நோ கேரன்டி… நீ குளிச்சிட்டு வா.. இந்த முண்டம் கர்ருபுர்ருன்னு ஏதாவது முணங்கிக்கிட்டுத் தான் இருக்கும். நானும் பதில் வசவை முணங்கிக்கிட்டு தான் இருப்பேன்…”
குளித்துவிட்டு திரும்பினாள் ஆமீரா. அக்காளும் மச்சானும் பிரகாஷ்ராஜ் போல கோட்டா சீனிவாசராவ் போல ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருந்தனர்.
“உங்க சண்டைக்கு நடுவே எனக்குச் சாப்பிடயே பிடிக்கல…”
“அவன் மூஞ்சுபக்கம் திரும்பாம வயிறார சாப்பிடு ஆமீரா!”
“புருஷன் பொண்டாட்டி சண்டை உங்க வீட்ல மட்டும் தானா? உலகம் பூராவுமா?”
“புருஷன்க இஸ்ரேல்ன்னா பொண்டாட்டிக பாலஸ்தீனர்கள். புருஷன் குண்டு போடாத நாளில்லை. சைத்தானின் மனித வடிவம் ஆண்கள்!”
சாப்பிட்டு முடித்தாள் ஆமீரா. தாரிக் ஒரு அறையிலும், அக்காள் தங்கை ஒரு அறையிலும் படுத்துக் கொண்டனர்.
- விடிந்ததும். ஆமீரா, “அக்கா! நான் ஊருக்கு கிளம்புறேன்… பை தி பை நீயும் பாய்ஜானும் போட்ட நடிப்பு சண்டை சூப்பர். நீங்களிருவரும் என் முன் எதற்காகச் சண்டை போட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஒரு ஹதீஸ்தான் உங்க நாடகச் சண்டைக்கு அடிப்படை. ‘காணாமல் போன மகன் கிடைத்துவிட்டால் அனாதைக் குழந்தைக்கு முன் கொஞ்சாதீர்கள். ஏழைகளின் முன் வைத்து உங்களுடைய செல்வம் பற்றிப் பெருமை பேசாதீர்கள். அதேபோல் விதவைகளின் முன்னில் வைத்து உங்கள் மனைவியை அன்பு பாராட்டாதீர்கள்!’ என்கிறார் நபிகள் நாயகம். உங்க சண்டையை பார்த்து நான் ‘சீச்சீ இந்த பழம் புளிக்கும்’ எனக்கூறி ஓடும் நரியாக வேண்டும் என விரும்புனீர்கள் இல்லையா? ஒரு திருமணத்தில் இருக்கும் நல்லது கெட்டதுகளை நான் நன்கு அறிவேன். மேரேஜ் இஸ் எ நெசசரி ஈவில். என் கணவரின் வருட பாத்தியா முடிந்த பின் நான் கட்டாயம் மறுமணம் செய்து கொள்வேன். நீங்கள் சண்டை என நினைத்துப் போட்ட சண்டையில் டன் கணக்கில் காதல் ரசம்தான் சொட்டியது!”
அக்கா காலிதா பேகம் பாய்ந்து ஆமீராவை கட்டிக் கொண்டாள்.
“நோ மோர் பொய் சண்டை. நீ இருடி என் செல்லக்கன்னுக்குட்டி” என்றவள் கணவன் பக்கம் திரும்பி, “அக்கா தங்கச்சி பாசத்தை பார்த்து கண் வைக்காம எட்டிப் போடா சைத்தானே!” காதலாய் வசவினாள்.