”இடி இசைக்கத் தொடங்கும் இரவு
ஆகாயம்
மின்னல் கீற்றுகள்
ஒளிக்கற்றைகளைப் பீய்ச்ச
சடசடத்து விழும் பெரும்
தூறல்களை
மழையின் பாடல்களாக
அனுப்பியதற்கு
பூமி என்ன கைமாறு
செய்துவிடப் போகிறதென
யாரும் எண்ண வேண்டாம்
உச்சம் பெரும்
சூபியின் நீர்த்தாண்டவம்
வானத்திற்கான சமர்ப்பணம்”
- வலங்கைமான் நூர்தீன்
வாசலின் அழைப்பு மணி சங்கீதமாய் சிணுங்கியது.
“யாராக இருந்தாலும் உள்ளே வரலாம்!” குரல் கொடுத்தார். யாஹ்யா கான். வயது 86. இஸ்லாமிய பாடகர் குறிப்பாக கவ்வாலி பாடுவதில் அற்புதர். பாடல்களை பெரும்பாலும் அவரே இயற்றுவார். தலையில் துணி தொப்பிஅணிந்த ஒரு வாலிபன் எட்டினான்.
“அஸ்ஸலாமு அலைக்கும் அத்தா!”
“வஅலைக்கும் ஸலாம்… யார் நீ?”
“என் பெயர் கலீல் ஜிப்ரான். எனக்கு வயது 21. முதுகலை தமிழ் இரண்டாமாண்டு படிக்கிறேன். உங்களை பார்க்க சென்னையிலிருந்து நாகூருக்கு ஓடோடி வந்திருக்கிறேன்!” கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாக்ஸை நீட்டினான்.
வாங்கி தன்னருகில் வைத்தார் யாஹ்யா.
“வா… உனக்கு என்ன வேணும்?”
“கடந்த 10 வருடங்களாக கவ்வாலி பாடல்களை கேட்டு வருகிறேன். கேட்கும் போது அவை என் உயிரை உருக்கி விடுகின்றன. ஒவ்வொரு பாடலின் உச்சத்திலும் இறைவனை ஆலிங்கனம் செய்கிறேன். நிறைய சூபி பாடல்கள் எழுதியிருக்கும் உங்களுக்கு கவ்வாலி பற்றி நிறைய தெரியும் என யூகித்தேன். உங்களை நேரில் பார்த்து கவ்வாலி பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்டுத் தெளியுற வந்திருக்கிறேன்!”
“வா… என் காலடியில் அமர்!”
அமர்ந்தான்.
“கலீல் ஜிப்ரான்!. தேனீர் அருந்தியபடி பேசுவோம்!”
தேனீர் வந்தது.
இருவரும் உறிஞ்சினர்.
“கலீல்! கவ்வால் என்கிற அரபி வார்த்தைக்கு பேசு அல்லது சொல் எனப் பொருள். கவ்வாலி என்பது மதபக்தியையும் கடவுளுக்கான ஆன்மிக நெருக்கத்தையும் தூண்டுவதற்காக சூபிகளால் நிகழ்த்தப்படும் ஒரு இசை வடிவம். சிஷ்டி சூபி பிரிவின் சமா என்கிற ஆன்மிக இசை நிகழ்ச்சிடன் தொடர்புடைய ஒரு இசை வடிவமே கவ்வாலி. ஓபரா பாடகர்கள் போல மென்மையான மேலண்ணத்தை மேலுயர்த்தி ஆழமான உள்வாய்க்குழி அகலமாக பாடுகிறார்கள் கவ்வாலி பாடகர்கள்.
கவ்வாலியின் ஒரிஜினல் வடிவம் பெர்ஷியாவில் எட்டாம் நூற்றாண்டில் தோன்றியது. இந்திய, துருக்கிய, அரேபிய மற்றும் பாரசீக இசை மரபுகளின் கோர்வையை 13ஆம் நூற்றாண்டில் அமீர் குஸ்ரோ உருவாக்கினார்!”
“ஆஹா!”
“முகமது பாட்சா எனும் கவிஞர் எழுதிய ஒரு சூபி பாடலை பாடுகிறேன்... கேள்...”
“தாராளமாக பாடுங்கள்!”
“அல்லாஹு அல்லாஹ்
அல்லாஹு அல்லாஹ்
எம் துயரங்களைத்
தீர்க்கும் அல்ஹம்து லில்லாஹ்
அல்லாஹு அல்லாஹ் யா
ரஹமத்துல்லாஹ்
சரணம் 1
புல்லென பூமியில் விழுந்து
கிடந்தோம்
மழையெனப் பொழிந்து தழுவிப்
படர்ந்தாய்
கல்லுக்குள் இருக்கின்ற
தேரைக்கும் நீதான்
சுவாசம் கொடுத்து இரையினை
அளித்தாய்
சரணம் 2
கனவுகள் கட்டியே கவிதையில்
வாழ்ந்தோம்
மறையினைக்காட்டிக்
கரையினில் சேர்த்தாய்
அண்ணர் முகமது ஸல்லெனும்
உயரிய தூதை
உலகுக் களித்து உயிர்ப்பையும்
கொடுத்தாய்.
சரணம் 3
குடையை பிரித்தோம் காற்றில்
பறந்தது
சிறகை விரிக்கும்
பறவைகளைக் கண்டு
உமது அருளை விரித்து
பறவைகளானோம்
கருணையளிப்பாய்
கண்ணொத்த ரஹ்மானே!”
கைத்தட்டி மகிழ்ந்தான் கலீல் ஜிப்ரான்.
“கவ்வாலிக்கென்று சில நிபந்தனைகள் உள்ளன. கவ்வாலி பாடல்களை குழந்தைகளோ, பெண்களோ பாடக்கூடாது. ஆனால் தற்போது பெண்கள் கவ்வாலி பாடுகின்றனர். கவ்வாலி பாடலில் அல்லாஹ்வின் நினைவே முக்கியம். பாடல் வரிகளில்
ஆபாசமோ அநாகரீகமோ கூடவே கூடாது!”
சுவராசியமாக தலையாட்டினான் கலீல் ஜிப்ரான்.
“கவ்வாலி பாடல்களுக்கு இசைக்கருவிகள் கூடாது என்றிருந்தது. அந்த நிலை தற்போது மாறி ஹார்மோனியம், தபேலா, டோலக், கைதட்டல், கோரஸ் எல்லாம் கவ்வாலி பாட்டோடு பாட்டாக கலந்து விட்டன. கவ்வாலி பாடல்களில் கீழ்க்கண்ட ஐந்து அம்சங்கள் அவசியம் இருக்கும்.
1. பிரிவுத் துயர் ஏக்கம்.
2. பக்தியும் சரணாகதியும்.
3. வரம்புகளை மீறுதல்.
4. தெய்வீகத்தை காதலித்தல்.
5. பாடியதையே பாடியே பேரானந்த பரவசநிலை அடைதல்!”
“பேரானந்த நிலையை இப்போதே உணர்கிறேன் அத்தா!”
“மீண்டும் மீண்டும் ஒரே பாடுபொருள், தாளமுறை, கைத்தட்டல், உச்சஸ்தாயியில் குரல் ஆலாபனை கவ்வாலியின் பிரத்தியேக அம்சங்கள்!”
“கவ்வாலி பாடகர்களில் பிரபலமானவர்கள் சிலரை பட்டியலிடுங்களேன்!”
“கசல்களின ராஜா ஜக்ஜித் சிங், ஹரிஹரன், பங்கஜ் உதாஸ், தலத் அஜீஸ், பூபிந்தர் சிங், அனுப் ஜலோட்டா, பரிதா கானும், உஸ்தாத் மெஹந்தி ஹஸன் குலாம் அலி மற்றும் கசல்களின் ராணி பேகம் அக்தர்…”
“வாவ்!”
“முதல் பெண் கவ்வாலி பாடகி ஷகிலா பானோ போபாலி… ஐகான் பாடகர் நுஸ்ரத் பதே அலி கான் பாடிய ஒரு கவ்வாலியை பாடுகிறேன்… கேள்… இப்பாடலின் தமிழாக்கம் ரமீஸ் பிலாலி….
“அல்லாஹு அல்லாஹு அல்லாஹு
அல்லாஹு அல்லாஹு அல்லாஹு”
இந்த பூமி இல்லாத ஒரு காலத்தில்
இந்த உலகம் இல்லாத ஒரு காலத்தில்
நிலாவும் சூரியனும் இல்லாத காலத்தில்
இந்த வானம் இல்லாத காலத்தில்
இறைவனின் ரகசியம்
எவருக்கும் வெளிப்படாத அந்தக் காலத்தில்
எப்பொருளும் தோன்றாத அந்தக் காலத்தில்
நீ மட்டுமே இருந்தாய் என் இறைவனே.
“ஏகனே! உன்னை அன்றி வேறு இறைவன் இல்லை என்பதே உன் மகத்துவம்
நீயே என் நினைவு, நீயே என் உணர்வு, நீயே என் நாட்டமும் தேட்டமும்
நீயே என் விழியின் ஒளி, நீயே என் இதயத்தின் குரல்
இருந்ததும் நீயே, இருப்பதும் நீயே, இருக்கப் போவதும் நீயே…நீயே…”
“கவ்வாலி சொல்லித்தர பள்ளிகள் உண்டா அத்தா?”
“டெல்லி ஸ்கூல் ஆப் மியூசிக், சென்னையில் உள்ள கோம் மியூசிக் கன்சர்வேட்டரி, ஷங்கர் மகாதேவன் அகாடமி, பெங்களூரின் பாரத் சர்கம் கவ்வாலி சென்டர், பெங்களூரின் நிகிலா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டர்நேஷனல் ம்யூசிக், ஹைதராபாத்தின் பன்சிலால் பத்ருல்லா ஸ்கூல் ஆப் ம்யூசிக் அண்ட் டான்ஸ் இவைகளில் எதாவது ஒன்றில் சேர்ந்து கவ்வாலி கற்றுக் கொள்ளலாம். டெல்லியின் ஹஜ்ரத் நிஜாமுதீன் அவ்லியா தர்கா கவ்வாலி பாடகர்களின் வேடந்தாங்கலாக விளங்குகிறது. இது தவிர கவ்வாலி வொர்க் ஷாப்கள் உள்ளன. ஆன்லைனிலும் கவ்வாலி வகுப்புகள் நடக்கின்றன…”
“நான் அங்கெல்லாம் போக விரும்பவில்லை. வாராவாரம் சனி ஞாயிறு உங்களிடம் கவ்வாலி கற்றுக் கொள்ள வருகிறேன் கற்றுத் தருவீர்களா?”
சிரித்தார் யாஹ்யா கான்.
“கைகால் விலங்குகளை உருக்கி விடுவி
உருக்கினதை வாளாக மாற்று
ஒவ்வொரு போர்க்களத்தையும் வெற்றி பெறு
ஓ பக்தனே!”
- உரத்தக் குரலில் பாட ஆரம்பித்தார் யாஹ்யா கான்.