ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையம்.
ரங்ககிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் கத்தார் ஏர்வேஸ் அலுமினியப் பறவையில் ஏறினார். அவருக்கு வயது 45. கடந்த 15 வருடங்களாக ஜெர்மனியில் டேட்டா சயின்டிஸ்ட்டாக பணிபுரிபவர்.
அவருடன் அவரின் மனைவி திகழன்பு இருந்தார். வயது 40. அவர் ஜெர்மனியின் மிகப்பெரிய மருத்துவமனையில் மெடிக்கல் கோடராக பணி புரிகிறார்.
தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் உண்டு. மகன் விபிலேஷ் வயது14. மகள் தைவினி வயது பத்து.
கத்தார் ஏர்வேயில் டோஹா போய் இறங்கி, மலேஷியன் ஏர்லைன்ஸ் பிடித்து, கோலாலம்பூர் போய் இறங்கி, இன்டிகோவில் ஏறி சென்னை சர்வதேச விமான நிலையம் இறங்கி, அங்கிருந்து திருச்சிக்குப் பயணம்.
மொத்தம் பயண நேரம் 25 மணி நேரம் 45 நிமிடங்கள்.
கத்தார் ஏர்வேஸின் அலுமினியப் பறவை 32, 000 அடி உயரத்தில் மிதந்தது.
தைவினி வாய் திறந்தாள். “அப்பா! மூணு விமானங்கள் மாறி இந்தியாவில் எந்த இடத்தை பார்க்க போகிறோம்?”
“வங்காள விரிகுடாவின் அருகிலிருக்கும் நாகை மாவட்டத்தின் கடலோர நகரத்தில் அமைந்திருக்கும் நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு போகிறோம். டிசம்பர் 14 ஆம் நாளிலிருந்து 28 வரையிலான 14 நாட்கள் கந்தூரி நடக்க இருக்கிறது. 14 நாட்களும் நாகூரில் தங்கி இருந்து சூபி பக்தி மழையில் நனைய இருக்கிறோம். திருச்சியிலிருந்து நாகூர் 139 கிமீ. ரயிலில் பயணித்து நாகூர் சேர்வோம். ஹோட்டல் கிராண்ட் நியாட்டில் இரண்டு அறைகள் புக் பண்ணியுள்ளோம். அம்மாவும் நானும் ஒரு அறை. நீயும் அண்ணனும் ஒரு அறை!”
“தர்கா என்றால் என்ன?”
“சூபிஞானிகளை அடக்கம் செய்த இடம், வழிபாட்டு தளமாக மாறுகிறது. தர்கா சர்வ மதத்தினருக்கான பிரார்த்தனைக் கூடம். தர்காக்கள் மத நல்லிணக்க வேடந்தாங்கல்கள்!”
“நாகூர் தர்காவில் எந்த சூபிஞானியை அடக்கம் செய்துள்ளார்கள் அப்பா?” குறுக்கிட்டான் விபிலேஷ்.
“சூபிஞானி நாகூர் சையத் அப்துல் காதிர் ஷாகுல் ஹமீது இந்த தர்காவில் அடங்கியுள்ளார். இந்தத் தர்காவில் மஸ்ஜித் என்கிற தொழுமிடமும் இணைந்துள்ளது.
இந்தத் தர்கா இன்டோ- இஸ்லாமிக் கட்டடக்கலையில் கட்டப்பட்டது. 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தங்கத்தகடு குவிமாடம் ஒன்றும் ஐந்து மினாராக்களும் உள்ளன. 16ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரில் ஆட்சி செய்த அச்சுதப்பா
நாயக் என்கிற மன்னனுக்கு வந்த விசித்திர நோயை சூபிஞானி ஷாகுல் ஹமீது குணப்படுத்தி இருக்கிறார். தர்காவுக்குள் ஷிபா குண்டா என்கிற குளம் இருக்கிறது.
பக்தர்கள் அங்கு நீராடுவர். நாகூர் தர்கா 5 ஏக்கர் பரப்பளவு உள்ளது. நான்கு வாசல்கள் உள்ளன. தர்காவில் ஷாகுல் ஹமீது சூபி துறவியின் பேரர்களின் கல்லறைகளும் உள்ளன. பீர் மண்டபமும் தொழுமிடமும் அடுத்தடுத்து
அமைந்துள்ளன.
“வாஞ்சூர் வழிபாட்டுத்தலமும், சிவாடி வழிபாட்டுத் தலமும் பிரதான தர்காவுக்கு வெளியே அமைந்துள்ளன. தர்காவையும் சூபி ஞானியையும் புகழ்ந்து பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. திருக்கர்ண புராணம், நாகூர் புராணம், காஞ்சுல்காரமட்டு, நாகையந்தாதி அவற்றில் சில. நாகூர் தர்கா வக்பு வாரியத்துக்கு உட்பட்டது!”
“அப்பா! ஒரு தர்மசங்கடமான கேள்வி!”
“என்ன?”
“நாம் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். ஷாகுல் ஹமீது சூபி ஞானி இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். நாம் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தர்காவை தரிசிக்கப் போனால் நம்ம சாமி நம்ம கண்ணைக் குத்தாதா?’
சிரித்தார் ரங்ககிருஷ்ணன்.
“சூபிகளும், சித்தர்களும் ஒரே கிளையில் பூத்த இரு மலர்கள். தர்காவைத் தரிசிக்க வரும் மக்களில் 60 சதவீதத்தினர் இந்துக்களே. நீ எந்த மதத்தினனாக இருந்தாலும் உன் நேர்மையான பக்தி இறைவன் எந்த வடிவத்தில் இருந்தாலும் போய்ச் சேரும். குழந்தை இல்லாத உன் தாத்தா நாகூர் ஆண்டவருக்கு நேர்ந்துதான் என்னைப் பெற்றார். நான் முதல் குழந்தை நாகூர் ஆண்டவருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டவன்!”
“இந்து- முஸ்லிம் பிரிவினை இப்போது தலைவிரித்தாடுகிறதே… நீங்கள் எப்படி இஸ்லாமின் மீது தனிக் காதலாய் இருக்கிறீர்கள்?”
“மூன்று காரணங்கள். ஒன்று இசைதேவன் நாகூர் ஹனிபா பாடல்கள். அவரது குரல் காந்தர்வக் குரல். அவரது குரலோடு ஓரளவு ஒத்து போவது கண்டசாலா குரல். நாகூர் ஹனிபா பாடல்கள் இந்து மதத்தையும், இஸ்லாம் மதத்தையும் இணைத்த மணிப்புறா சிறகு விரிப்பு. இரண்டாவது காரணம், ஏபி நாகராஜன் படங்கள். திருவிளையாடல், கந்தன் கருணை போன்ற படங்கள் மூலம் இந்து மதத்தை இஸ்லாமியர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார் நாகராஜன். மூன்றாவது எல் ஆர் ஈஸ்வரியின் மாரியம்மன் பாடல்கள்!”
“ஓவ்!”
“எனக்கு அதீக் உசைன்கான், நிஷா அஜீஜி, அல்டாப்ராஜா, முனவர் மாசூம் மற்றும் ஹம்ஸர் ஹயாத் கவாலி பாடகர்களின் பாடல்கள் மிகமிகப் பிடிக்கும்!”
“நாகூர் தர்காவில் பிரசாதம் தருவார்களா?”
“நாகூர் தர்கா சன்னதியில் ஜியாரத் செய்யும் போது ரோஜாப் பூ, மல்லிகைப்பூ, வெற்றிலை தப்ரூக் தருவார்கள். கலர்கலர் பூந்திகள் பாத்தியா ஓதுபவர்கள் விநியோகிப்பது உண்டு!”
“நாகூரின் சிறப்பான பத்து விஷயங்கள் சொல்லுங்கள் அப்பா!”
“நாகூர் ஒரு இயற்கைத் துறைமுகம். கப்பல் கட்டும் தொழிலும், நெசவுத் தொழிலும் நடந்த பாரம்பரிய ஊர். நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர் நாகூர் குலாம் காதிர் நாவலர் பிறந்த ஊர். அரசியல், ஆன்மிகம், இலக்கியம், பாரம்பரியப் பண்பாடுகள், பழங்கால வரலாற்றுத் தகவல்கள், வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்த ஊர் நாகூர். நாகூரில் நாகூர்வாடா, பீப் பக்கோடா, தம்ரூட் அல்வா, தொதல் அல்வா, லேகிய அல்வா, புரோட்டா பேமஸ்…”
“நாகூர் ஹனிபா போல அவருக்கு பின் பாடிய பாடகர்கள் பலர் இருப்பார்களே?”
“ஆம். முகவை சீனி முஹம்மது, காஞ்சிபுரம் சலாவுதீன், தரங்கம்பாடி சாகுல் ஹமீது, திருச்சி எஸ் எம் யூசுப், நெல்லை அபுல் பராகத், நெல்லை அபுபக்கர், மதுரை ராஜா முஹம்மது, நாகூர் ஹெச். ஏ. ரகுமான், இறையன்பன் குத்தூஸ், நாகூர் ஜெக்கரியா, டிஎஸ் கென்னடி, மலேசியா செய்யது அலி, இலங்கை எம்.எஸ்.கமால், இலங்கை ஆஷிக் முதலியோர் இசைமுரசு பாணியில் பாடுபவர்கள்…”
“நாகூர் ஹனிபாவுக்கு மகன் மகள் இருப்பார்களே அவர்களில் யாராவது அப்பாவைப் போல பாடுகிறார்களா?”
“நாகூர் ஹனிபா மகன் நாசர் தனிகுரலில் பாடுவார். ஆனால் அவர் மேடைகளில் பாட விரும்புவதில்லை!”
“நாகூர் ஹனிபாவின் பூர்வீக வீடு எங்குள்ளது?”
“கௌதியா பள்ளிக்கு பக்கத்தில் உள்ள நூர்ஷா தைக்கால் தெருவில் உள்ளது. மகன் நாசர் வசிக்கிறார். இப்போது அந்தத் தெரு நாகூர் ஹனிபா தெரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!”
“சூப்பர்!”
“அந்தக் காலத்தில் ரஹீமா சுவீட் ஸ்டால் அல்வாவும் ரபீக் ஸ்வீட் ஸ்டால் அல்வாவும் பேமஸ். எத்தனையோப் புரோட்டா கடைகள் இருந்தாலும் பாபா பாய் கடை புரோட்டா தனி டேஸ்ட்!”
“அப்படியா?”
“மிகமிக முக்கியமான விஷயம். நாகூரில் கடந்த நூறு வருடங்களாக கௌதியா சங்கம் இயங்கி வருகிறது. ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி, மதரஸா என இம்மைக்கும் மறுமைக்கான கல்வியைப் போதிக்கும் மாபெரும் போதிமரம் இது. நாகூர் ஹனிபாவைப் பாடகராக அரங்கேற்றியதும் இந்த சங்கம்தான். பல புகழ்பெற்ற அரசியல்வாதிகளின் இலக்கியவாதிகளின் வேடந்தாங்கல் இது!”
“முழுமையான தகவல்களுக்கு நன்றி அப்பா!”
- திருச்சி விமான நிலையத்தில் இறங்கி ரயில் ஏறினர். விடுதி அறைக்குத் திரும்பிக் குளித்தனர். நால்வரும் தர்காவைத் தரிசித்தனர். மயிலிறகால் நால்வரின் தலை வருடப்பட்டது. நூறு புறாக்களை வாங்கிப் பறக்க விட்டார் ரங்ககிருஷ்ணன்.
சந்தனத் தேரோட்டம், புனிதக் கொடியேற்றம். ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் ரங்ககிருஷ்ணன் குடும்பத்தினர். தொழுவதையும் குர்ஆன் ஓதுவதையும் கண்ணுற்றனர், காதுற்றனர். தம்ரூட் அல்வா தின்றனர். கறிக் குழம்பில் ஊறவைத்த புரோட்டா விழுங்கினர்.
தினம் இரவுகளில் ஹவாலி பாடல் கேட்டனர். ஹவாலி பாடகர்களுக்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளைப் பரிசளித்தார் ரங்ககிருஷ்ணன்.
ரங்ககிருஷ்ணன் மொட்டை போட்டுக் குளத்தில் குளித்தார்.
நாகூர் ஹனிபாவின் மகன் நாசரை சந்தித்து ‘மௌத்தையே நீ மறந்து வாழலாகுமா?’ பாடலை பாடச் சொல்லி ரங்ககிருஷ்ணன் குடும்பத்தார் கேட்டனர்.
சூபி பாடல் அச்சுப் பிரதிகளை, ஆடியோக்களை வாங்கினர்.
மொத்தத்தில் 14 நாட்களில் சூபித்துவ ஆன்மிக கடலில் மூழ்கி திளைத்தது ரங்ககிருஷ்ணன் குடும்பம்.
ஒரு தொழுகையாளி வினவினார், “அடுத்து எப்ப வருவீங்க மிஸ்டர் ரங்ககிருஷ்ணன்?”
“இன்ஷா அல்லாஹ்… 2028 ஆம் ஆண்டி வருவோம்!”
இந்துமத விழுமியங்களும் இஸ்லாமிய மத விழுமியங்களும் கைகோர்த்து நடனமாடி குலவை இட்டன.