வகிதாவிடம் தூதஞ்சலில் வந்த திருமண அழைப்பிதழை கையளித்தேன்.
“ஆப்ரகாம் சாமுவல்ராஜ் வீட்டுத்திருமணம். மதுரையில் நவம்பர் பத்தாம் தேதி திருமணம். காலையில் திருமணம். மாலையில் வரவேற்பு. வரவேற்பு நிகழ்ச்சி என் தலைமையில்!”
“இன்னும் உங்க எழுத்துக்கள் மீது கிரேஸா இருக்ற வாசகர்கள் இருக்காங்களா?”
“ஆச்சரியமா சொல்றியா, வருத்தமா சொல்றியா?”
“ஆச்சரியமாகத்தான்… அந்த ஆப்ரகாம் சாமுவல்ராஜ் உங்களை ஒரு சினிமா நடிகரா நினைச்சிட்டாரா?”
“இந்த ஆராய்ச்சி எதுக்கு? அன்பும் அபிமானமும் கொண்டு அழைக்கிறார். போய் வருவோம். திருமணத்திற்கு வந்து போக நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டிருந்தார்”
“நீங்கள் என்ன கேட்டீர்கள்?”
“ஒரு கிலோ அன்பு ஒரு கிலோ சகோதரத்துவம் ஒரு கிலோ மதுரைக்கார பாசம் எடுத்து வைக்கச் சொல்லி இருக்கிறேன்!”
“வாசகர் வீட்டுத்திருமணம். அன்பளிப்பு என்ன செய்வோம்?”
“அழைப்பிதழில் பார்த்தீர்களா? அன்னை மேரி படம் போட்டிருக்கிறார்கள். ஆகையால் இவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்… இவர்களின் இதயத்தை தொடுகிற மாதிரி நம் அன்பளிப்பு இருக்க வேண்டும்!” யோசித்தாள் வகிதா.
“என்னுடன் முனிஞ்சிபட்டியில் படித்த ஸ்டெல்லா என்கிற தோழி இருந்தாள் அல்லவா?”
“ஆமாம்… உடல்நலக் குறைவால் இறந்துவிட்டாள்!”
“அவளது லேடீஸ் பேக்கில் எப்போதுமே ஒரு ரோஸரி வைத்திருப்பாள்…”
“ரோஸரி என்றால் என்ன?”
“ரோஸரி என்றால் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஜெபமாலை. இந்துக்கள் அவர்களின் தெய்வங்களின் பெயர்களை ஜெபிக்க ருத்ராட்ச மாலை, துளசிமணிமாலை, படிக மாலை, சங்குமணி மாலை, பவளமணி மாலை, வைஜந்தி மாலை, தாமரை மணிமாலை, நவரத்தின மாலை, சந்தன மாலை இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துவர். இஸ்லாமியர்களின் ஜெபமாலையை தஸ்பீஹ் மணிமாலை என்போம்!”
“ஓஹோ!”
“ரோஸரி 59 மணிகளால் ஆனது. கண்ணாடியால், மரத்தால், பிளாஸ்டிக்கால் ஆன மணிகளை நைலான் அல்லது பாலியெஸ்டர் இழைகளில் கோர்த்திருப்பர். நவரத்தினக்கற்கள், குன்றிமணி, செவ்வந்திக் கல், வெங்கச்சங்கல், கோமேதகக்கல், நவரத்தினகற்கள் மற்றும் விதைகளாலும் மணிகள் செய்வர். மணி மாலையுடன் கீழ் இணைப்பாக உலோகத்தால் செய்யப்பட்ட சிலுவை தொங்கும்…”
“ரோஸரி பத்தி இவ்வளவு விஷயங்கள் உனக்குத் தெரியுமா?”
“நான்கு வகை ரோஸரிகள் உள்ளன… செவன் சாரோ ரோஸரி, ஜாய்ஸ் ஆப் மேரி ரோஸரி, பிரிஜிட்டைன் க்ரவுன் மற்றும் கிறிஸ்து மற்றும் கன்னிமேரியை கண்ணியப்படுத்தும் ரோஸரி!”
“ஓ!”
“வாரத்தின் ஏழுநாட்களும் ரோஸரி வைத்து நான்கு வித ஜெபிப்புகள் நடைபெறும். திங்கள், சனி மகிழ்ச்சி நிறைமறை உண்மைகள். துயர்மறை உண்மைகள் செவ்வாய் வெள்ளி. மகிமை நிறைமறை உண்மைகள் புதன் ஞாயிறு. ஒளிநிறை மறை உண்மைகள் வியாழக்கிழமை…”
“ஜெபம் ஜெபம் ஜெபம்…”
“மிகச்சிறிய ஜெபம்… ஹெய்ல் மேரி. தமிழில் அர்த்தம் ‘வாழ்க மரியா’ அல்லது ‘வாழ்க கன்னி மரியா’…”
“ஹெய்ல் மேரி!”
“ஒரு ஜெபம் கூறுகிறேன் கேளுங்கள். ‘மகிமை நிறைந்தவரே, மரியே வாழ்க! இறைவன் உன்னுடன் இருக்கிறார். பெண்களுள் மிக சிறந்தவராக நீரே வாழ்கிறீர்கள். உம்முடைய நற்செயல்களும் மிகவும் புனிதமானவை. கடவுளின் தாயாரே, பாவிகளாகிய எங்களுக்காக இப்போது இறப்பிலும் எங்கள் இறப்பு நேரத்திலும் இறைவனிடம் மன்றாடும்’…”
“குட்!”
|
கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக!

நமது தேசத்தின் அதிபதிகளுக்காவும், அதிகாரம் வகிப்பவர் எல்லாருக்காகவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக. வியாதியஸ்தர், உபத்திரவப்படுவோர், துக்கப்படுவோர், மரணத் தருவாயிலிருப்போர் அனைவருக்காவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக. ஏழைகள், பட்டினியாயிருப்போர், அனாதைகள், விதவைகள், உபத்திரப்படுவோர் அனைவருக்காகவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக. அந்தகாரத்தினின்று நம்மைத் தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய மகத்துவங்களைக் காண்பிக்கும் பொருட்டாக, நமக்காகவும், கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கை பண்ணும் யாவருக்காகவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக. கர்த்தாவே, கிருபையாயிரும்.!
|
“கொஞ்சம் பெரிய ஜெபம் ஒன்றை சொல்கிறேன் கேளுங்கள். விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லா வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியிடமிருந்து பிறந்தவர். பொந்திய பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். எங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியானவரை நம்புகிறேன். புனித கத்தோலிக்க திருஅவையை நம்புகிறேன். பாவ மன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். நிலைவாழ்வை நம்புகிறேன். தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே ஆமென்…”
“இயேசுவைக் கடவுளின் குமாரராக கிறிஸ்தவ மதத்தில் வழிபடுகின்றனர். நாமோ கிறிஸ்துவை ஈஸா நபி என்கிறோம். அவர் கடவுளின் மகனல்ல இறைச்செய்தியை மனித சமுதாயத்திற்கு பரப்ப வந்த நபி என்கிறோம்” நான்.
“அவரவர் நம்பிக்கை அவரவருக்கு” வகிதா.
“உலகின் ஜனத்தொகை 800 கோடி. எட்டுநூறு கோடியில் 260 கோடி பேர் கிறிஸ்துவர்கள். கிறிஸ்துவர்களில் பல உட்பிரிவுகள் உண்டு. உலக அளவில் இஸ்லாமியர் ஜனத்தொகை 200 கோடி. யூதர்களின் ஜனத்தொகை ஒன்றரைக் கோடி…” நான்.
“ஜனத்தொகை கணக்கு எதற்கு?” வகிதா.
“உலகின் ஜனத்தொகையில் 32.5 சதவீதம் கிறிஸ்தவர்கள். 25 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் என புள்ளி விவரம் கூறுகிறேன்!” நான்.
“மீதி 42. 5 சதவீத மக்கள் 7000 மதங்களை சேர்ந்தவர்கள்…”
“இந்து மக்கள் உலக அளவில் 120 கோடி இருக்கிறார்கள். அவர்கள் உலக ஜனத்தொகையில் 15 சதவீதம்…”
“இம்மூவரும் ஒற்றுமையாக இருந்தால் பூமி சுபிட்சமடையும்…” வகிதா.
“மேரேஜ் கிப்ட் வால்கிளாக் வாங்கித் தருவாங்க. காசு உள்ளவங்க வெள்ளி டம்ளர் பிரசன்ட் பண்ணுவாங்க…”
“நாம இரண்டாயிரம் ரூபா பிரசன்ட் பண்ணுவோமா?”
“பணம் வேண்டாம்!”
“நம்மின் கல்யாணப்பரிசு அவர்களின் ஆன்மிக உணர்வை வருடிக் கொடுக்க வேண்டும்!”
“தமிழ் மொழிபெயர்ப்பு பைபிள் பிரசன்ட் பண்ணுவோமா?”
“ஐஎப்டி சகோதரர் மாதிரி குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு கொடேன்… கல்யாணத்ல வந்தும் உன் இஸ்லாமை பரப்புறியான்னு கிண்டலிப்பாங்க…”
“நீயே சொல்லேன்… என்ன பிரசன்ட் பண்ணலாம்னு நீயே சொல்லேன்!”
“அமேஸான் அல்லது பிளிப்கார்ட்டில் தரமான ரோஸரி விலைக்கு கிடைக்கும். மாப்பிள்ளைக்கு கறுப்புமணிகள் கோர்த்த ரோஸரி 1000 ரூ விலையில். மணப்பெண்ணுக்கு 1000 ரூபா விலையில் பிங்க் நிற ரோஸரி பரிசளிப்போம்…”
“மொத்தம் இரண்டாயிரம் செலவாகும் இல்லையா?”
“நம் வாழ்நாள் முழுக்க மத நல்லிணக்கம் வலியுறுத்திதான் இஸ்லாமிய நீதிக்கதைகள் எழுதி வருகிறோம். நாம் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என தஸ்பீஹ் மணி மாலை வைத்து திக்கிர் எடுக்கிறோம். கிறிஸ்தவர்களோ ‘வாழ்க கன்னி மரியா’ என ரோஸரி வைத்து ஜெபிக்கின்றனர். இந்து மக்களோ ருத்ராட்ச மாலை வைத்து ‘ஓம் நமச்சிவாயா’ என ஜெபிக்கின்றனர். பக்தி ஆத்மார்த்தமாய் இருந்தால் எல்லா ஜெபிப்புகளும் பெயரிலி இறைவனைத்தான் போய் சேரும். ஐ லவ் இஸ்லாம் ஸேம் டைம் ஐ ஹானர் ஆல் அதர் ரிலிஜென்ஸ்!” என்றாள் வகிதா.
“ஓகே… ரோஸரி ரெண்டு செட் அமேஸானில் ஆர்டர் பண்ணுவோம்!”
மணமகன் ஃபுல் சூட்டில் மணமகள் வெள்ளைநிற தேவதை கவுனில். நானும் வகிதாவும் கண்ணாடிப்பேழைகளில் இருந்த ரோஸரி ஜெபமாலைகளை கையளித்து மணமக்களை வாழ்த்தினோம்.
“நூறாண்டு ஆனந்தப் பெருவாழ்வு வாழ உங்கள் கர்த்தர் உங்களுக்கு அருள் புரியட்டும்!”
“வாழ்க கன்னி மரியா!” கோரஸ் குரல் எழுந்தது.